Monday, February 26, 2024

ஒரு வேளை.....

 அந்த பரந்த வெட்ட வெளியில் ஓரிடத்தில் நண்பர்கள் பேச்சு மாநாடு தொடங்கியது.

"போடா..! ஆவி, பேய் என்பதெல்லாம் வெறும் புரளி."நான் என்னை ஒரு தடவை விடாது பிடித்த  ஒரு தோஷத்திற்கு கூட, எங்கள் அம்மா அப்போது எவ்வளவோ சொல்லியும்,  பரிகாரமாக சொன்ன அந்த ஒரு ஆவியை நான் கொஞ்சம் கூட கண்டுக்கவேயில்லை தெரியுமா?"1 இது விக்னேஷ்.

அது என்னடா அப்படி உன்னைப்பிடித்த விடாத தோஷம் ? 

"அதாண்டா..! இந்த ஜலதோஷம்..! அதைச் சொல்றான்..!" லேசாக தலைகாட்டிய நகைச்சுவையில் நண்பர்களின் ஆவிப்பற்றிய பேச்சின் கவனம் லேசாகவும் கலைந்தது. 

"இல்லைடா..!! நான் என் அனுபவத்தை சொல்கிறேன். இவ்வளவு சொல்லியும், அது என்னடாவென்று அதிலே ஒரு ஈர்ப்பு வர வேண்டாமாடா உனக்கு...!" என்றான் இவர்கள் பேச்சால் சற்று காட்டமாக அருண் குமார்.

"நீ இப்படித்தான் எதையாவது சொல்லி எங்களை பயமுறுத்துவே ..! அப்புறம் இதெல்லாம வெறும் என்னோட கற்பனை, தமாஷுக்குனு தப்பிச்சிடுவே..!" என்றான் இருவருக்கும் பொதுவான சமாதானமாய் குரு.

" இல்லைடா..! இது என் நிஜமான அனுபவம். எப்போதும் போல் இதிலே போய்  விளையாடுவேனா.. !!!! நான் சொல்வது உண்மை. என்னை நம்பு..! டேய் பிரகாஷ் நீயாவது என்னை நம்பு... "அருண் சற்றே காட்டம் குறைந்து கருணை தேடும் பாவத்தில் பேசினான்.

" நீ என்ன சொன்னலும் சரி..!! நான் இந்த ஆவி. பேய்'னு எதையும் நம்ப மாட்டேன். இந்த உலகத்துல நாம்தான் உடலோடு நடமாடும் பேய்கள். நாம்தான் பிறருக்கு நம்மையறியாமல், ஒரு பேயின் குணத்தோடு தொந்தரவுகள் தந்தபடி இருக்கிறோம். " இது விக்னேஷின் வாதம்.

"சரி..! சரி!! இருட்டும் நேரத்தில் ஏன் இந்த வாதம்..? வேறு ஏதாவது நல்லதாக பேசலாமே..!! " இது வரை அவர்களது பேச்சை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த பிரகாஷ் இடைமறித்தான். 

" உள்ளதைச் சொன்னால் உனக்கும்  பயமாக உள்ளதா பிரகாஷ்? அதுதான் நான் அன்று பெற்ற அந்த அனுபவத்தை விளக்க வந்தேன். " மீண்டும் சற்று  காட்டமானான் அருண்.

" என்னடா உன் பொல்லாத அனுபவம்? அதைத்தான் சொல்லேன்..! கேட்டு விட்டு நம்பலாமா, வேண்டாமா எனச் சொல்கிறேன்." இந்த தடவை எரிச்சலுற்றது விக்னேஷ்.

"அதைச் சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க..! வெறும் பிரமைன்னும், கப்ஸா விடுறேன்னும் சொல்வீங்க .. ஆனா இந்த தடவை என் கண்ணை நான் நம்பறேன். "என்றான் உறுதியான குரலில் அருண்.

" போங்கப்பா..! இன்னைக்கு சப்ஜெக்ட் இதை சுத்தியே.....! வெறும் போர். நான் கிளம்பறேன். இவ்வளவு நேரம் எங்கேடா போய் ஊரைச்சுத்திட்டு வர்றேனு.... வீட்டிலே திட்டுதான் விழும். எங்கண்ணா மேல இருக்குற கோபத்தை அப்பா என் பேர்லே சேர்த்து வச்சு காட்டுவார். நான் வர்றேப்பா..!" என்றபடி எழுந்தான் பிரகாஷ்.

டேய் இருடா..! நான் அதைப்பத்தி.. முக்கியமா.. நீயும் சேர்ந்து எங்களோடு  இருக்கும் போது சொல்லலாமுன்னு  வரும் போது, இப்படி கிளம்பிறியே...!! அருணின் குரல் அவனை தடுத்தது.

" டேய்..! அவன் போகட்டுண்டா.. அவன் அப்பா நிஜமாகவே அவனை திட்டுவார். நீ சொல்றதை நாங்க நம்புற மாதிரி இருந்தா நாளைக்கு அவன்கிட்டே மறுபடியும் சொல்லிக்கிலாம்.!! நக்கலான குரலில் விக்னேஷ் இடைமறிக்கவும் அருண் அவனை கோபமாக பார்த்தான். .

அதற்குள் எழுந்து நாலடி முன் வைத்த பிரகாஷுடன் குருவும் கிளம்பவே, தான் சொல்ல வந்ததை கேட்காமல், கிளம்பும் அவர்களையும் அருண் முறைத்தான்

வானம் இருள ஆரம்பித்தது. இவர்கள் அமர்ந்திருந்த பகுதியை சுற்றிலும்  இருட்டு தன் வசமாக்கிக் கொள்ள, அருகாமையில் உள்ள நீண்ட சாலையில் ஓடிய வாகனங்களின் வெளிச்சப் புள்ளிகள் கீற்றாய் இவர்களைத் தொட்டு மறைந்தபடி இருந்தன. 

பிரகாஷும், குருவும் கண்களுக்கு தெரியாத தூரத்தில் மறைந்து சாலையை அடைந்து விட்டார்கள். அருண், விக்னேஷ் இடையே தொடங்கிய ஒரு மெளனத்திரையை ஒரு பறவையின் ஒலி கிழித்தெறிந்தது. 

"சரி.. வாப்பா.. !! நாமும் கிளம்பலாம். நாளைக்கும் அடுத்த வாரமும்  ஒரு இண்டர்வியூ இருக்கிறது கொஞ்சம்  படித்து பிரிப்பேர் பண்ணனும்." என்றபடி தானும் மெளனம் கலைந்தான் விக்னேஷ். 

மெளனமாக முகத்தை தன் பக்கம் திருப்பாமல் வேறு புறம் திரும்பியபடி எழுந்து நடந்த அருணின் மனநிலையை புரிந்தபடியாய் அவன் தோளில் கை போட்டு அணைத்தபடி நடக்க ஆரம்பித்தான் விக்னேஷ். 

" அருண் உன் மனநிலை எனக்குப் புரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை. உன்னுடன் என் மனது ஒத்துப் போகாததால், உனக்கு எதிராக பேசி விட்டேன். இப்போது சொல். உன் அனுபவத்தை கேட்கிறேன்." என்றதும், அருண் அவசரமாக மறுத்தான். 

"வேண்டாம்.. எனக்கு ஏதோ அன்று தவறாகப்பட்டதை உங்களிடம் சொன்னால், பிரகாஷுக்கும் நன்மை செய்த மாதிரி இருக்குமேன்னு ஆரம்பித்தேன். அவனும் போயிட்டான். இப்போ அதை நினைச்சுப் பார்த்தாலும், ஒரு திகில் என் மனசுக்குள் வருது. ஆனால் இப்ப அதைச் சொன்னாலும், நீங்க யாரும் நம்பப் போறதில்லை." அவன் முகத்தில் தெரிந்த சலிப்பு விக்னேஷுக்கு வியப்பை தந்தது. 

" அப்படி என்னடா அவனுக்கு நன்மை தரும்படியாக விஷயம்.? " அவன் குரலின் ஆர்வம் அருணை பேச வைத்தது. 

" போன வாரம் பிரகாஷ் என்னிடம் பேசிய போது, அவன் அண்ணன் பாலாவைப் பற்றி கவலைப்பட்டு என்னிடம் சொல்லிக்  கொண்டிருந்தான். ஒரு வேலையில் நிரந்தரமாக இல்லாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் அவனுக்கு உண்டாகியிருக்கும் பல கெட்ட சகவாசங்கள்... அதனாலே வீட்டிலே தினமும் அப்பாவுக்கும், அவனுக்குமிடையே எழும் யுத்தங்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவன் அண்ணன் தீடிரென நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார்.கொஞ்ச நேரத்தில் அண்ணனுடன் பிரகாஷும் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டான்." 

" எங்களிடையே நடந்த அந்த கொஞ்சநேர பேச்சுக்களின் நடுவே அவர் பின்னால் நெருக்கமாக அவர்  தோளை தொட வர்ற மாதிரி நிழலாக நிழலாடிய ஒரு பெண்ணுருவத்தை சட்டென பார்த்தேன். பார்த்த விநாடியில் நான் விழி இமைக்கும் நேரத்தில்,அது மறைந்து விட்டதென்றாலும், மாயையாய் புகை மாதிரி அவருக்குப் பின்னால் நெருக்கமாக தோன்றிய அவள் தோற்றம், எனக்குள் ஒரு பய உணர்வை ஏற்படுத்தியது. உடனே பிரகாஷிடம் கூட சொல்ல முடியாதபடி எனக்குள் இன்று வரை ஒரு படபடப்பு. அதுதான் இன்று நாம் எல்லோரும் இருக்கும் போது சொல்லலாமென ஆரம்பித்தேன். "அபரிமிதமான ஒரு பய உணர்வுடன் அவன் சொல்லுவதை கேட்டு  கொஞ்ச நேரம் சற்று திகைத்த விக்னேஷ் கலகலவென சிரித்தான்.

" போடா..!! பைத்தியக்காரா..! நல்லவேளை அவனிடம் சொல்லி அவனையும் பயமுறுத்தாமலும், எங்களிடமிருந்தும் செமையாக அடியும்  வாங்காமலும் தப்பித்தாய்..!! இனியும் அவனிடம் இப்படி ஏதாவது சொல்லி அவனை பயமுறுத்தி விடாதே...!" என்றபடி அவன் கையை பிடித்தபடி நடந்தான். 

விக்னேஷ்  அம்மாவின் சொல்படி சமையலறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்தான். அம்மா அவள் சமையல் வேலை செய்யும், பள்ளிக்கு அன்று பள்ளி விடுமுறை எனினும் ஏதோ அங்கிருந்து வரச் சொல்லி அழைப்பு வரவே அந்த வேலைக்காக  அவசரமாக சென்றிருந்தாள். 

அப்பா இல்லை. அம்மா வளர்த்த பிள்ளையாய் அவளின் சிரமங்களை நன்கு உணர்ந்து வளர்ந்தவன் விக்னேஷ் . ஒரே தங்கை திருமணமாகி அருகிலேயே ஒரு வெளியூரில்....! 

தன் திருமணத்தையும் அம்மா செயலாக்க விருப்பம் தெரிவிக்கும் போதெல்லாம் "நல்ல வேலை கிடைத்ததும் உன்னை அமர வைத்து நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும் வசதி வந்த பின்தான் என் திருமணம்"...! என தள்ளிப் போட்டபடி இருந்தான்.

அம்மா அவசரமாக அரிந்து சமையல் செய்த  பூசணி காய்கறி குப்பைகளை அகற்றி சமையலறை மேடையை சிறிது  சுத்தம் செய்து விடச் சொல்லி சென்றுள்ளாள். தான் அவசரமாக பள்ளிக்குச் செல்வதால், அதை மட்டும் செய்து விட்டு அவள் வருவதற்கு காத்திராமல் குளித்து, தான் சமைத்து விட்டு சென்றதை சாப்பிடும்படியும் அவனிடம் சொல்லி விட்டு சென்றுள்ளாள். 

அம்மா திரும்பி வருவதற்குள், அதை செயலாற்ற வேண்டுமென, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு சமையலறை மேடையை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினான் விக்னேஷ். 

அப்படி சுத்தப்படுத்தும் போது கையில் அகப்பட்ட அந்தப் பொருளை வியப்புடன் பார்த்தான் அவன். பூசணிக் காய்களின் விதை தோல் பகுதிகளோடு ஒரு சிம்பிளான ஒரு பொருள் பளபளத்து கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தான். இதை எப்படி அம்மா கவனியாமல் விட்டாள். ஒரு வேளை இது அம்மாவுடையதோ.. ? வீட்டில் எங்கோ இருந்தது இன்று இங்கு வந்து தற்செயலாக காய்களுடன் நழுவி கலந்து விழுந்ததை அவள் கவனிக்கவில்லையோ.. ? இல்லை அவசரமாக சமையலில் ஈடுபட்டதால், இது எப்படி இங்கே வந்திருக்க முடியும் என்ற கவனக்குறைவால்  கவனிக்கவில்லையா..? ஆனால், இதை மாதிரி ஒரு பொருளை அம்மா என்றுமே பயன்படுத்தியதாகவும் அவளிடம் இதைப் பார்த்ததாகவும் நினைவில் இல்லையே..! பல வித குழப்பங்கள் அலை மோத சற்று வாய் விட்டே கேள்விகளை எழுப்பினான். அம்மா வந்ததும் இந்த விஷயத்தை சொல்லி சந்தேகம் கேட்டறிய  மனம் அவ்வேளையில் பரபரத்தது. 

இது என்னுடையதுதான்.. குரல் எங்கிருந்து எந்த திக்கில் வந்தது என புரியவில்லை. காதோரங்களில் கிசுகிசுப்பாக மீண்டும் அதே பதில். ஒரு நொடி தந்த அந்த பிரமையில் உடல் ஜில்லிட "யாரது?" என்றவனுக்கு தன் குரலே ஒரு வித்தியாசமாக ஒலித்தது. 

சுத்தம் செய்யும் பணி சில நிமிடம் நின்று போனது. காற்றில் அசையும் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தது முதல் வாசல் வரை ஒரு முறை சென்று விட்டு வந்தவனுக்கு ஒரு இனம் புரியாத படபடப்பு தோன்றியது. 

அம்மா சமையலறை மேடையில் ஒரு ஓரமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்த வானொலியில் எழுந்த  குரலாக கூட அது இருக்குமென தோன்றியதால் அதை ஒரு தடவை குமிழ்களை திருப்பி சரி பார்த்து வந்தான். குரல் தெளிவாக கேட்டதை மீண்டும் ஒரு முறை நினைத்துப பார்த்தவன் ஒரு வேளை தன் மன பிரமையாக இருக்கலாம் என அதை  தூரத் தள்ளி வைக்க நினைத்தான். 

மீண்டும் அந்தப் பொருளின் நினைவு வரவே, இது எப்படி இந்த காய்கறி குப்பையுடன் வந்தது என மனதினுள் யோசிக்கவும், காதருகே "இது நிஜமாகவே என்னுடையதுதான்" என்ற அந்த அமானுஷ்யமான  குரலும் ஒலிக்க, அடுத்த நொடி தாமதிக்காமல் வாசல் கதவை திறந்து வாசல் படிகளை வந்தடைந்தான் விக்னேஷ்.

அவன் அம்மா வந்ததும் இன்னமும் குளிக்காமல், கொள்ளாமல், சாப்பிடவும் செய்யாது ஒரு விதமான  பிரமிப்புடன் இருக்கும் மகனை பாசத்துடன் கண்டித்தாள் .

"உனக்கு நேரமில்லையென்றால், நான் வந்து கூட இதையெல்லாம் செய்வேனே..!!உன்னால் முடிந்தால் செய்து விடு என்றுதான் சொன்னேன். படித்துக் கொண்டேயிருந்தாயா.. ? இப்படி எதுவும் சாப்பிடாமே எப்பவும் ஏதோ படித்தபடி வயிற்றை பட்டினி போடுகிறாயே..! சரி.. சரி..! நீ குளித்து விட்டு சாப்பிட வா..!! நான் எல்லாத்தயும் எடுத்து வைக்கிறேன்....!" என்று அன்புடன் கடிந்து கொண்டு ஆசுவாசமாக ஹாலில் சற்றே அமர்ந்த அம்மாவை கண்டதும், சற்றே பிரஞ்கை வரப் பெற்றவனாய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல், விரைவாகச் சென்று சமையலறை மேடையில் அந்த விதைகளோடு கலந்திருந்த அந்தப் பொருளை மட்டும் எடுத்து அலம்பி தன் ரூமில் படிக்கும் மேஜையறையில் பத்திரப்படுத்தி விட்டு குளிக்கச் சென்றான் அவன். மனம் பயங்கர குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. காரணமில்லாமல், அருண் நினைவு வந்தது. அவனின் பிரமைகள் இப்போது தனக்குமா என யோசித்ததில், "சே..!! இது என்ன நமக்கும் அதே பையித்தகாரதனமாக அர்த்தமற்ற எண்ணங்கள்." என்ற சிந்தனை எழுந்தது ஆனாலும் அந்த பளபளத்த பொருள் சற்று  குழப்பியது. அம்மாவிடம் சொல்லி வீணாய் அவளையும் பயமுறுத்தும் எண்ணத்தை அப்போதைக்கு கை விட்டான். 

"அருண்...! நம்ப பிரகாஷ் அண்ணனைப்பற்றி வேறு ஏதாவது விபரம் தெரியுமா உனக்கு..!" தீடிரென விக்னேஷ் ஆரம்பிக்கவும் அருண் திகைத்தான். மற்ற நண்பர்கள் இல்லாத நேரமாக அவன் குறிப்பாக பிரகாஷின் அண்ணனைப் பற்றி கேட்டது  அவனை மேலும் வியப்புக்குள்ளாக்கியது. 

"ஆமாண்டா... அவன் எந்த வேலையிலும் நிலையாக இல்லாததோடு, அடிக்கடி குடிப்பழக்கம் வேறு.. தினமும் வீட்டில் இவரால் ஏதோ ஒரு பிரச்சனை.. அவன் அப்பாவும்" இவன் எப்படியாவது மனம் மாறி நல்லவனாக திருந்தி விட்டால், எப்படியாவது ஒரு நல்ல பெண் பார்த்து கல்யாணத்தையும் நடத்தி வைத்து விட்டால், முழுதாக மாறி விடுவான்" என்று நப்பாசையுடன் வீட்டில் பேசுவாராம். ஆனா அதுக்கும் இடம் தராமல், யாரையோ தான்  விரும்புவதாகவும், அந்த பெண் வீட்டில் "இவனுக்கு கட்டி வைப்பதை விட உன்னை பாழும் கிணற்றில் தள்ளலாம்." என அந்தப் பெண்ணின் அப்பா மறுத்து கூறுவதாகவும், பிரகாஷிடம் தனியே அவன் அண்ணன் கூறியதாகவும் பிரகாஷ் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறான். தீடிரென ஒரு நாள் அவன் விரும்புவதாக சொன்ன அந்தப் பெண் இறந்து விட்டதாக அவன் அண்ணன் கூறியதை நம்பாமல், பிரகாஷ் அவர்கள் உறவின் வழி சென்று விசாரித்த போது, அவள் தானாக இறக்கவில்லை. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் கிடைக்கவே, அண்ணனை அவன் குடிபோதையில் இருக்கும் போது விசாரித்ததில், "அவளிடம் தான் நடந்து கொண்ட தன் தவறான பல செய்கையால் கூட அவள் மனமுடைந்து இறந்து போய் இருக்கலாம்....!! இல்லை அவள் அப்பா எங்கள் திருமணத்திற்கு மறுத்து வேறு ஒருவனுக்கு மணம் முடிக்கச் செய்த கண்டிப்புக்கு பயந்தும் இந்த முடிவை எடுத்திருக்கலாம்....!! "என்ற உண்மையையும் அண்ணன் உளறியதாக கூறியிருக்கிறான்." அருண் தனக்கு தெரிந்த விபரங்களை நண்பன் கேட்கவும் மடமடவென ஒன்று விடாமல் ஒப்பித்தான். 

" இவ்வளவு நடந்திருக்கிறது.நீங்கள் எங்களிடம் இதுவரை நண்பர்கள் என்ற முறையில் இந்த தகவல்களையெல்லாம்  சொல்லவேயில்லையே.. "விக்னேஷ் உண்மையிலேயே வருத்தமாக கேட்டான். 

" இல்லை.. சில சமயங்களில் நாங்கள் தனியே சந்தித்து பேசும் போது அவன் எனனிடம் சில சமயம் அவன் இப்படி வருத்தத்தை ஷேர் செய்வான், நான் அவனுக்கு ஆறுதல் சொல்லுவேன் அப்போது மனம் உடைந்து மேலும் சொல்லுவான். "இது என்ன நல்ல விஷயங்களா? எல்லோரிடம் சொல்லி சந்தோஷபடுவதற்கு..?" என என்னிடமே கேட்டு விட்டு, "நம் நண்பர்களிடம் இதுபற்றி சொல்லாதே..! அவர்களும் இது கேட்டு  சேர்ந்து  வருத்தப்படுவார்கள். அப்பாவுக்கு தெரிந்தால் எல்லாவற்றையும் எல்லோரிடமும் ஏன் சொல்கிறாய் எனவும் சத்தம் போடுவார்" என கேட்டுக் கொள்வான். அதனால் நானும் இதுவரை யாரிடமும் எதுவும் சொன்னதில்லை. நீயே இன்று கேட்டதால் சொன்னேன். அவன் அண்ணன் நல்லபடியாக மனம் மாறி திருந்தி நல்ல வேலைக்குப் போய் அவங்க அப்பாவுக்கும் குடும்பத்திற்கும்  சந்தோஷத்தை தர வேண்டும் என நானும் நினைத்துக் கொள்வேன். 

"நம்ப பிரகாஷுக்கும் அவன் படிப்புக்கேற்ற மாதிரி நல்ல வேலை இல்லையே..! அவங்க வீட்டில அவனோட இரண்டு அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனே இன்னமும் அடைக்க முடியல்லேனு பிரகாஷ் அடிக்கடிச் சொல்வானே..!! அவங்க அப்பா கூட கிராமத்தில் ஏதோ விவசாயம் செய்தும் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லைன்னும்  வருத்தப்பட்டிருக்கிறான்... இல்லையா.. ? "விக்னேஷ் தனக்கும் அவனைப்பற்றி சிறிது தெரியுமென்பதை வெளிப்படுத்தினான் . 

"ஆமாம். கிராமத்திலே அவங்களுக்கு சொந்தமாக சிறிதளவு  நிலத்திலே ஏதோ உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டு விவசாயம் செய்கிறார். அங்கு நடவு செய்யப்பட்டிருக்கும்   பூசணிக்காய்கள் விளைச்சலைப் பார்த்து வரச்சொல்லி அவர் தன் பெரிய மகனை அடிக்கடி அனுப்பி வைப்பார். அப்போது அங்கிருந்து விளைச்சலை கவனித்துக் கொண்டிருந்த  வேலையாள் பெண்ணைத்தான் இவன் அண்ணன் பாலா விரும்பியிருப்பதாக  பிரகாஷ் கூறியிருக்கிறான். ...! இதையெல்லாம் கூட அவனாக சொல்லவில்லையாம்... கொஞ்ச நாட்களாக அவன் அண்ணன் அங்கு போகும் போது அவளுக்கு பிடித்தமான வளையல்கள்... தலை முடிக்கு வைத்துக்கொள்ளும் கிளிப்புகள் என இவனுடன் கடைகளுக்கு சேர்ந்து சென்று வாங்கிப் போவானாம். கிராமத்துப் பெண் என்பதால் இதையெல்லாம் அவள்  விரும்புகிறாள் எனவும் அடிக்கடி கிண்டல் செய்வானாம்.. ." என்று அருண் சொன்னதும், கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ் மனதில் தன்னையறியாமல் ஒரு நொடி இனம் புரியாத அதிர்ச்சி எழுந்தது. மனதுக்குள் ஏதேதோ நினைவு வந்து உடலை லேசாக ஜில்லிட வைத்தது. 

அதற்குள் பிரகாஷும்,அங்கு  வரவே அவர்கள் மேற்கொண்டு ஏதும் பேசாது மூவரும் பொதுவாக வேறு ஏதேதோ பேசி விடை பெற்றனர். 

வேலைக்கான நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு சென்று விட்டு விக்னேஷ்  அப்போதுதான் வீடு  திரும்பியிருந்தான். அவனின் ஒரே தங்கை அவன் கிளம்பி போனதும் தன் நான்கு வயது மகனுடன்  வீட்டிற்கு வந்திருக்கவே  வீடு கலகலவென்றிருந்தது. "மாமா" என்றபடி ஓடி வந்து அவன் காலை கட்டிக்கொண்ட தங்கை மகனை வாரி அணைத்தபடி கொஞ்சம் போது உள்ளிருந்து அவன் தங்கையும் வந்து "அண்ணா.. எப்படி இருக்கிறாய்? போன விஷயம் வெற்றிதானா? அம்மா சொன்னாள்.." என்றாள்..

 "ம்..அதெல்லாம்  உடனே தெரியுமா? பார்ப்போம்.." என்று பதிலளித்தவன் "நீ எப்போது வந்தாய்? எப்படி இருக்கிறாய்? உன் அவர் வந்திருக்கிறாரா.. எப்படி இருக்கிறார்  மாப்பிள்ளை? என சற்று நேரம் அவளுடன் ஆர்வமாக பேச ஆரம்பித்தான்.  

"இல்லை அண்ணா..! அவருக்கு ஏதோ வேலையாம்... எனக்கு அம்மாவை பார்க்கனும் போல இருந்ததால் நான் மட்டுந்தான் வந்தேன்.. பக்கந்தானே...! நாளை அவரே வந்து அழைத்துப் போவேன் என்றார். சரி.. நீ சாப்பிட வா..!அம்மா உனக்காகத்தான் இன்னமும்  சாப்பிடாமல் இருக்கிறாள்..! சீக்கிரமா உடை மாற்றி விட்டு வா..! என்றபடி குழந்தையை அவனிடமிருந்து கூட்டிச் கொண்டு உள்ளே சென்றாள்.  

உடை மாற்றி வர தன்னறைக்கு சென்றவனுக்கு அறையின் சுத்தம் சற்று வித்தியாசமாக உறைக்கவே, தங்கையை அழைத்து, "நீ ஏன் வந்ததும், வராததுமாய் என் அறையெல்லாம் சுத்தப்படுத்தி வேலையை இழுத்துப் போட்டுக் கொள்கிறாய்.!!! என அன்போடு கடிந்தான். 

" அட... போ.. அண்ணா.. நான் ஏன் அப்படி செய்யப் போறேன்.. உன் மருமகன் அப்படி செய்ய வைத்து விட்டான். உன் மேஜையறையை வந்ததும் முதலில் சுத்தம் செய்ததே அவன்தான்..! நீ வந்து கத்தப்போறியேன்னு, அவன் கிழித்து போட்டிருந்த குப்பைகளோடு நானும் அறையை கூட்டிப் பெருக்கி கொஞ்சம் சுத்தப்படுத்தினேன்... அவ்வளவுதான்.." என தங்கை முடித்ததும் அவனுக்கு மனத்துள் ஒரு பதற்றம் வந்தது. 

தங்கை அறையை விட்டு நகர்ந்ததும், அன்று தான் வைத்த அந்தப் பொருளை அவசரமாக தேடிப் பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த பளபளப்பான பெண்கள் தலை முடியில் வைத்துக் கொள்ளும் அந்த கிளிப் காணாமல் குப்பைகளோடு போயிருந்தது. அதை எங்கு தேடியும் கிடைக்காததால் மனத்துள் லேசாக ஒரு பீதியும் வந்தது. 

மாலை அருணை சந்தித்து தன் மனக்கலக்கத்தை  சொன்னால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்குமென அவன் வீட்டுக்குப் போன போது அவன் அங்கு இல்லையென தெரிந்தது. "எங்கு போனான் இவன்..! என யோசித்து கொண்டே வழக்கப்படி நண்பர்கள் சந்திக்கும் இடம் நோக்கி நடந்து வந்த போது,  பின்னால் அருணின் அழைக்கும் குரல் கேட்டது. 

" விக்னேஷ்...!! உன்னைத்தேடி நான் உன் வீட்டுக்குத்தான் போய் வருகிறேன். உனக்கு விஷயம் தெரியுமா.. ? அதிர்ச்சியோடு படபடத்தான் அருண்.. 

என்னடா சொல்லு...!! அவன் அதிர்ச்சிக்கு காரணம் தெரியாது  விக்னேஷ் கேட்கவும, " நம் பிரகாஷ் அண்ணன் இப்போ ஆஸ்பத்திரியிலே உயிருக்கு போராடிகிட்டிருக்கார்." என அருண் கூறிய வார்த்தைகள் விக்னேஷை அதிர வைத்தன. 

என்னடா சொல்கிறாய். .? 

"ஆமாம்.. இன்னைக்கு வழக்கப்படி  அவர் அப்பா சொல்படி கவனிப்பதற்காக  அந்த கிராமத்து வயல் வெளிக்கு போன பிரகாஷ் அண்ணன் எதிரபாராத விதமாக பூசணிக் கொடிகள் காலில் மாட்டிக் கொண்டு தடுக்கி கீழே விழுந்ததில், அங்கிருக்கும பெரிய கல்லில் விழுந்து  தலையில் ரத்த காயத்துடன் அடிபட்டு விட்டதாம் உடனே விபரமறிந்து இங்கே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து விட்டனர். .கொஞ்சம் சீரியஸாகவே உள்ளதாம். டாக்டர்கள் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் அப்பா, பிரகாஷ் அனைவரும் ஆஸ்பத்திரியில் கலங்கிப் போய்... எனக்கு பார்க்கவே மிகவும் கஸ்டமாக இருக்கிறதடா.... !! " கண்கள் கலங்க அருண் சொன்னதும், விக்னேஷும் கண்கள் கலங்கினான்.

"டேய் அருண்..! அந்த பூசணி கொடியை கவனிக்காமல் அவன் கால் தடுக்கி விழுந்திருக்க மாட்டான் என நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்...? அவன் எப்போதும் அங்கு வழக்கமாக செல்பவன்தானே...! ஒரு வேளை அந்த பூசணிக்  கொடி பிரகாஷ் அண்ணன் காலில் தானாக வந்து சுற்றியிருக்குமோ ?" விக்னேஷின் குரலில் இருந்து பயத்துடன் ஒலித்த ஒரு சந்தேக அழுத்தத்தை ஒரு வித வியப்போடும், கலக்கத்துடனும் கவனித்தான் அருண்.  

அந்த புரியாத கேள்விகளுக்கு இருவரின் மனதிலும் விடைகள் தாமாக எழுந்து நின்று ஆக்ரோஷமாக ஆடிக் கொண்டிருந்த சந்தேகத்தை ஆசை தீர தின்று தீர்க்க இயலாமல் ஒன்றுக்கு பத்தாக பன்மடங்காக்கி பெருக்கிக் கொண்டிருந்தன. இப்போதெல்லாம் ஆவி, பேய் என யார் சொன்னாலும், விக்னேஷ் மறுத்து ஏதும் சொல்வதில்லை. 

முற்றும்

Tuesday, February 20, 2024

கண்களுக்கு விருந்து.

பெங்களூர் லால்பாக் எப்போதுமே ஒரு தனிஅழகுதான். அடர்த்தியான மரங்களும், வண்ணமிகு பூக்களுமாக பார்வையில் கண்கொள்ளா காட்சிகளாக விழ, காலாற நடந்தாலே மனதின்  இறுககங்கள் சற்று குறையும்.இங்கு வந்த பின் சில  தடவைகள் சென்றுள்ளோம். ஆனால், வருடந்தோறும் ஆகஸ்ட் ஜனவரி மாதங்களில வரும் மலர் கண்காட்சிக்கென்று சென்று ரசித்ததில்லை. முதலில் செல்லும் போதெல்லாம் அங்குள்ள பசுமையை கண்களால் ரசித்து விட்டு வந்ததோடு சரி... அப்படி கண்கள் எடுக்கும் புகைப்படங்களும், மனதில் சிறிது காலம் பதிந்திருந்து, பிறகு நாங்கள் வேறு மற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு கண்கள் இயந்திரதனமான எடுத்து தள்ளும் புகைப்படங்களின் பாதிப்பால் மாயமாகி மறைந்து போகும். இப்போது (இப்போது என்றால்.. சமீபத்தில் அல்ல...! இது ஒரு வருடத்திய (வருடம் சென்ற வருடமா, அதற்கு முந்தைய வருடமா என நினைவில்லை. வருடத்தை எப்படியாவது நினைவுபடுத்தி கூறினால், என்னை அடிக்கவே வந்து விடுவீர்கள்.:)))) ) நவம்பரில் சென்று வந்த போது எடுத்த படங்கள்..) என் கைப்பேசியில் நிறைய படங்களை என் கண்களுக்கு அவ்வளவாக வேலையை தராமல் எடுத்து குவித்து விட்டேன். (இப்படி ஆங்காங்கே எடுத்த படங்கள் அளவுக்கதிகமாக என் கைப்பேசியில்  தங்கி இருப்பதாக கூகுளாரும், என் குழந்தைகளும் நாளும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.அது வேறு விஷயம்.. .. ) அதை அவ்வப்போது என் பக்கம் பகிரவும் சமயங்கள் எனக்கு வாய்க்கவில்லை. 

 சகோதரி கீதாரெங்கன் அவர்கள் அவரின் தளத்தில் கொஞ்ச மாதங்களுக்கு முன் லால்பாக் மலர் கண்காட்சி படங்களைபகிர்ந்து கொண்டதை பார்த்ததும்,,  (அவர் அவரின் பதிவில் பகிரந்தே வருடங்கள் ஆகிவிட்டது. இதில் அவர் பதிவை பார்த்ததும் என்ற வசனம் ஒரு உலகமகா ரீல்.... என முணுமுணுக்க வேண்டாம். ஹா ஹா.) எனக்கும் நான் அங்கு ஏதோ எடுத்ததையெல்லாம் பகிரலாமே எனத் தோன்றியது. அடர்த்தியான பெரிய மரங்களும், நீண்ட பல வயதான மரங்களை வைத்து செய்த மரச்சிற்பங்களுமாக இங்கு  நிறைந்துள்ளதை பொதுவாக அனைவருமே (அதிலும் இங்குள்ளவர்கள்) அறிந்திருப்பீர்கள். இருப்பினும், என் கைப்பேசியில் ஏதோ  தலை சிறந்த புகைப்படக்கலை நிபுணர் மாதிரி நான் எடுத்ததை பகிரலாமே என பகிர்ந்து விட்டேன். 

ஆழமாக வேரூன்றி அங்குமிங்கும் ஓடியவாறு  இருக்கும் பல பல வருடங்களை கடந்த மரங்கள் பிரமிபூட்டுகின்றன. பால்கனியில் ஒரு தொட்டியில் ஒரு செடியை வாங்கி வைத்து விட்டு தினமும் அது வளருகிறதா,.. தினமும் நாம் விடும் தண்ணீர் அதற்கு போதுமா.... வேறு என்ன உரம் வைக்கலாம்.. என தெனாலிராமன் குதிரை வளர்த்த விதமாக நா(ம்)ன் வளர்க்கும் போது, இவ்வளவு பெரிய மரமாக வளர எப்படியெல்லாம்  பராமரித்து வருகிறார்கள் என ஒவ்வொரு மரங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன பூத்துக் குலுங்கும் பல வகையான பூக்கள், நடந்து செல்ல ஒழுங்கான பாதைகள் அமைத்தல் என இந்தப் பூங்காவின் பராமரிப்பு கண் கொள்ளா காட்சிதான். நடப்பதற்கு மட்டும்  கால்களில் நல்ல வலு இருந்து விட்டால், சுற்றி வர ஒருநாள் போதாது. 

நானே பேசிக் கொண்டிருந்தால் எப்படி? புகைப்படங்களை (ஏற்கனவே நேரில் பார்த்து ரசித்திருப்பினும்) பார்க்க வேண்டாமா என நீங்கள் கேட்பது புரிகிறது. (இப்படியாவது ஒரு பதிவு எழுத காரணம் கிடைத்து விட்டதென எழுத ஆரம்பித்த போது  சந்தோஸப்பட்டேன். .இப்போதுதான் இதை வெளியிடும் சந்தர்ப்பம் அமைகிறது. அதற்கு சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ) 































நம் பதிவுலகில் சகோதர, சகோதரிகள் கேமிராவில் எடுத்துப் பதிவாக்கும் புகைப்படங்களுக்கு முன் இது வெறும் சாதாரணந்தான். ஆனாலும், பதிவை படித்து படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்னமும் அங்கு எடுத்த படங்களை அடுத்தப் பதிவில் பகிர்கிறேன். (என்ன கொடுமைப்பா.... இது... என நீங்கள் பொறுக்க இயலாமல் கூவுவது கேட்கிறது... ஹா ஹா.) நன்றி. 

Wednesday, February 14, 2024

பறவையின் சுதந்திரம்

சுதந்திரம் என்றாலே பொதுவாக பறவைகளைத்தான் மனிதர்களாகிய நாம் ஒப்பிடுவோம். "இந்தப்பறவை மாதிரி சுதந்திரமாக இருக்கனும்.. இந்தப் பறவைகளைப் பார்..! வானத்திலே தன் மனம் போன போக்கில் பறந்து திரிந்து எப்படி  உல்லாசமாக வாழுகிறது. இப்படி நம்மால் வாழ இயலவில்லையே.." என பறவைகளை உவமானபடுத்தி பெருமூச்சு விடுவோம். ஆனால், "ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்தார் இறைவன்." என்பது போல ஆறு அறிவுகளையும் ஒவ்வொரு இனத்திற்கும் இவ்வளவுதான் எனவும், அளந்ததோடு மட்டுமின்றி இப்படித்தான் வாழவேண்டுமென்ற நியதியையும் இறைவன் தந்துள்ளார். 

பறவையை கண்டான் விமானம் படைத்தான்" என மனிதன் அதனிடமிருந்து சுயநலமாக நம் வசதிக்காக கற்றுக் கொண்டதும் அதிகம்."கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டது. அதனால் கூட்டை விட்டு பறந்து விட்டது.." என தங்கள் பேச்சை கேட்காத பிள்ளைகளை பெற்றோர் அந்தப் பறவைகளை துணைக்கழைத்து வசை பாடுவதும் அதிகம். ஆனால். பல பறவைகள் புத்திசாலிகளாய் சுயநலமிக்க மனிதனின் உணர்வை புரிந்து கொண்டவையாய் மனிதனை விட்டு விலகிப் போவதும் இப்போதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. 

நம் அன்புக்கு கட்டுப்பட்டு நம்முடனே நம்மைக்கண்டதும் பாசத்துடன் ஓடி வரும் போதும், நம் விரோதத்தை புரிந்ததுவாய் நமக்கு தொந்தரவுகள் தராமல் வேறிடம் பார்த்து குடி பெயரும் போதும் அதனின் நல்ல மனதை வெளிப்படையாக  எடுத்துக் காட்டுகிறது. அறிவுகள் அளவென பெற்ற  அதனிடமிருந்து இந்த ஆறறிவு பெற்ற மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம். 

நம் பறவை நேசர் சகோதரி கோமதி அரசு அவர்களின் சமீபத்திய பறவை பதிவுக்கு நான் கருத்து தெரிவிக்கும் போது, இப்படி எதிர் வீட்டில் முட்களை (பிளாஸ்டிக் மாதிரிதான் தெரிகிறது.) வைத்திருக்கிறார்கள் என்று பதிலாக சொன்னதும் அவர் சட்டென மனம் கலங்கி விட்டார்.

இப்போதுதான் புதிதாக கட்டியிருக்கும் அவர்கள் வீட்டில் இந்த புறாக்கள் வந்தமர்ந்து அசுத்தப்படுத்துகிறது என்றுதான் அவர்கள் இந்த ஏற்பாடு செய்துள்ளார்கள். எனினும் அதனுடைய வாழும் இடமான பல மரங்களை அழித்து நம்முடைய சுயநலத்திற்காக, கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்தனியாக  வசிக்க வேண்டி இப்படி தனி இருப்பிடமாக அமைத்துக் கொள்ள நாமும் முயற்சித்து விட்டோமே எனவும் தோன்றுகிறது. 

இதையெல்லாம் பார்க்கும் போது மனது நொந்தாலும், உயிர்களை படைத்த இறைவன் அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்தபடிதான் இருப்பான் எனவும் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்...! வேறு என்ன செய்வது? 


இப்படி எங்கும் முட்கள், எதிலும் முட்கள் என்றால் எங்குதான் வந்து அமர்வது?
 

இப்படி நாம் ஆசுவாசமாக வந்தமரக் கூட தடையாக ஏதோ வைத்திருக்கிறார்களே என யோசிக்கிறது போலும்...! நம் வேதனைகளை வாய் விட்டு சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்வார்களா எனத் தெரியவில்லையே...!! என மனதில் நினைத்தபடி அமர்ந்துள்ளது. 

மற்றொருவர் வீட்டை படம் எடுப்பது மிகத் தவறு. இந்தப் பறவைகளின் கூடு... அதன் வாழுமிடங்கள்... என அது நம்மோடு இணைந்து வருவதாலும், கோமதி அரசு சகோதரியின் பறவைகள் பதிவை படித்த தாக்கத்தினாலும், இப்படி படங்கள் எடுத்து விட்டேன். (இன்னும் நிறைய கோணத்தில் அது வழக்கப்படி வந்தமர்ந்த இடங்களில் எல்லாம் , இந்த முட்கள் வைத்தப்பின் எப்போதும் போல் வந்து அமர இடமின்றி தவித்த அந்த புறாக்களோடு எடுத்திருந்தேன். அவற்றையெல்லாம் அழித்து விட்டேன்.) ஏனெனில் இதற்கே இறைவன் என்னை மன்னிக்க வேண்டிக் கொள்கிறேன். அதோடு அவர்களும் (அந்த மற்ற வீட்டு உரிமையாளர்களும் மானசீகமாக ) மன்னிக்கட்டும்.


இப்போதும் சற்று ரிலாக்ஸாக அவ்வப்போது இவ்விரண்டும் வந்து முட்கள் இல்லாத இடமாக அமர்ந்து பேசி மகிழ்கிறது. 


"என்ன இடர்கள் வந்தாலும், நாம்  ஒருவருக்கொருவர் துணையாக வாழும் வரை பிரிவென்பதே இல்லாமல் இப்படியே சேர்ந்து இருப்போம்..." எனக் கூறி மகிழ்கிறதோ?


"இப்படி போட்டோக்கள் எடுத்து எங்களுக்கு என்ன நியாயங்கள் கிடைக்கப் போகிறது?" என்பதுதான் எங்கள் கேள்வி. இறைவன் இவ்வுலகில் பிறந்த உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வழி காண்பித்து  துணையாக இருப்பதைப் போல எங்களுக்கும் துணையாக இருப்பார் என நம்புகிறோம். நீங்களும் எங்களுக்காக பிரார்த்தனைகள் செய்து கொள்ளுங்கள். அது போதும்.." என்கிறதோ நம்மைப் பார்த்து. 

இன்றைய தினத்திற்காகவும் இந்தப்பதிவு. பொதுவாக காதல் என்ற சொல் பலருக்கும் தவறாகத் தெரிவதுதான். அந்த சொல்லிற்கு அன்பு, பாசம், பந்தம் போன்றவைகளும், பக்க வாத்தியங்கள் போல் பக்க பலமாக இருந்துதவி செய்கின்றன. இந்தச் சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டால், காதல் என்பது ஒரு அருமையான இசை. இந்த பாசம் மிகுந்த பறவைகளை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. வாழ்க இந்த காதல் புறாக்கள். 

இதைப்படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Thursday, February 1, 2024

கவசங்கள்.

 இது சமீபத்தில் (நான் எழுத ஆரம்பித்த போது இந்த சமீபத்தில்...... இப்போது அதைக் கடந்த செய்திகள் இதை தொலை தூரம் ஆக்கியிருக்கலாம் .எனவே இந்த  சமீபத்திய என்ற வார்த்தையை கண்டு கொள்ளாதீர்கள். :)))).) எ. பியில் தினமும் செய்தி அறை என்ற புதிய பகுதி (ஒரு சில  மாதங்களுக்கு முன் சென்ற வருடமென நினைக்கிறேன்) வந்து கொண்டிருக்கும் போது அதில் படித்த ஒரு செய்தி. 

/அமெரிக்காவில் ஒரு ஷு கடைக்குள் நுழைந்து வலது கால் ஷுக்களை மட்டும் திருடிய திருடர்கள்😀- சிரிப்புத் திருடர்கள். /

செய்தி கருத்துக்குப் பதிலாக "ஒரு கால் ஷுவை மட்டும் வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நான் கேட்டிருந்தேன்.

இதனைப் படித்ததும்  நாங்கள் இங்கு வந்த புதிதில்,  (இந்த ஏரியாவுக்கு) சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பழைய வீட்டிலிருந்து  அப்போதுதான் நாற்பது வீடுகளுக்கு மேலிருக்கும் அந்த அப்பார்ட்மெண்டுக்கு குடி வந்திருந்தோம். எங்களைப்போல் ஒரு பதினைந்து, இருபது பேர்கள்தான் வந்திருந்தாரகள். பாக்கி வீடுகளில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும் விட்டார்கள்.அதுபோல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று அப்பார்ட்மெண்ட்கள். அங்கும் நாற்பது வீடுகளில் பேர்பாதிதான் வந்திருந்தனர். 

அன்று இரவு நேரம். மதியம் ஷிப்ட் வேலைக்குப்  போயிருக்கும் என் குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு படுக்கவே பத்து பதினொன்று ஆகி விட்டது. மகள் மட்டும் நைட் ஷிப்ட் முடிந்து மூன்று மணிக்கு மேல்தான் வருவாள். சமயத்தில் நாலு மணி கூட ஆகிவிடும். எனக்கு அப்போதெல்லாம்  என்றுமே அதுவரை உறக்கம் கிடையாது. அவள் வந்த பிறகு கொஞ்சம் பேசி விட்டு நான்கு நாலரைக்கு மேல் மணிக்கு உறங்கி காலையில் 6 6.30க்கு எழ வேண்டும்.(காலையில் வேலைக்குப் போகும் மகன்களுக்கு ஏதாவது சமையல் செய்து தர.) 

நான் வாசலில் போய் நிற்காமல் பால்கனிக்கும், (பால்கனியிலிருந்து பார்த்தால் அவள் வரும் கேப் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நிற்பது தெரியும்.) ஒரு பெட்ரூம் அருகிலேயே வீட்டு வாசல் இருப்பதால்  அங்குமாகவும் அலைந்து கொண்டிருப்பேன். அவள் வீடு வந்து இறங்கும் நேரத்தில் ஃபோன் செய்வாள். இருப்பினும் எனக்கு கண் அசந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.

ஒரு மூன்றரை மணி போலே வாசல் பெட்ரூம் ஜன்னல் வழியாக திரை விலக்கி பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ஷுரேக் கதவகள் இரண்டும்  திறந்திருந்தது. ஒரு வேளை மகள் ஃபோன் செய்ய மறந்து போய் மாடியேறி வீட்டு வாசலுக்கே வந்து விட்டாளோ..? அவள்தான் கதவை திறந்து காலணிகளை வைப்பதற்காக காலணிகள் வைக்கும் கதவை திறந்துள்ளாளோ...? என நினைத்து விரைந்து வந்து வாசல் கதவை திறந்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் ஹாலுக்கு அருகிலிருக்கும் பெட்ரூம் ஜன்னல் வழி சென்று பார்த்தால் அந்த செருப்பு வைக்குமிடம் கதவுகள் ஹோ.....வென திறந்தேதான் இருந்தது. கொஞ்ச நேரம் முன்பு கூட மூடியிருந்தது நினைவுக்கு வரவே மறுபடி பால்கனி பிரவேசம். ஒரு மாதிரியான குழப்பத்தற்கு நடுவே யாரோ திருடன்தான் வந்திருப்பானோ....! மகள் வரும் சமயமாயிற்றே.. நாங்கள் இருப்பது மூன்றாவது மாடி. அவள் சமயங்களில் மின் தூக்கியை உபயோகிக்காமல் படிகளில் ஏறி வந்து விடுவாள்... என பலதும் எண்ணவும், என் இதய படபடப்பு கூடியது.

அவ்வளவுதான்...! வீட்டில் இருப்பவர்களை எழுப்பும் படலம். அவர்களால் சட்டென  எழுந்திருக்கவா முடிகிறது.  அதற்குள் மகள் நான் நினைத்தபடி மாடிப் படியேறி வந்தே விட்டாள். நான் பத்து நிமிடமாக தவிப்புடன்  வீட்டிற்குள் அங்குமிங்கும் அலைந்ததில் அவளின் மிஸ்ட்கால் எனக்கு கேட்கவில்லை. அவளைப் பார்த்தவுடன்  அதிர்ச்சியோடு நான் விஷயத்த்தை  சொல்ல, அவள் சொன்ன விஷயம் மேலும் அதிர்ச்சியை தந்தது. "ஆமாம் அம்மா.. எல்லா ப்ளோரிலும் காலணிகள் வைக்கும் அலமாரி திறந்துதான் இருக்கிறது. நானும் ஒரு வித ஆச்சரியத்தோடுதான் பார்த்தபடி படியேறி வருகிறேன்." என்றாளே பார்க்கலாம்..! 

பிறகு அவசரமாக ஒரு மட்டும் மகன்களை எழுப்பி விஷயத்தைச் சொல்லி புரிய வைத்து, அவர் அப்பார்ட்மெண்ட் வாசலில் இருக்கும் செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லி, அவர் வந்து ஒவ்வொரு வீட்டிலும் காலிங் பெல் அழுத்தி தகவலைச் சொல்லி மொத்தத்தில் அன்றைய நாள் எனக்கு  அந்த இரண்டு மணி நேர உறக்கமுமின்றி விடிந்தே விட்டது. 

அது ஸ்பிரிங் உள்ள கதவு. எல்லா வீட்டிலும் முக்கால்வாசி அப்படித்தான். (கதவை கவனமாக கைகளால் பிடித்தபடி சார்த்தாவிடில் "டக்"கென்ற சத்தம் கேட்கும்) என்பதால் வந்தவன்/ வந்தவர்கள் ஜாக்கிரதையாக கதவை சார்த்தாமல், அதிலுள்ள பல ஷூக்களை மட்டும் லவட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறான்./ கள். அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் அத்தனை பேர் செருப்புகள், ஷுக்களும் இதைப் போலவே அபேஸ். ஒவ்வொருவரும் ஆகா... இப்போதுதான் வாங்கினேன். 3000,4000 போச்சே.. என புலம்பினார்கள். எங்கள் மகன்களின் புது ஷுக்களும், அப்போதுதான் வாங்கிய  நல்லச் செருப்புக்களும் போயே போச்சு.

இதுதான் வியப்பு என்றால் அருகருகே இருக்கும் மற்ற மூன்று அப்பார்ட்மென்டிலும் இதே நிகழ்வு அந்த ஒரு இரவுக்குள் அதே நேரத்தில் நடந்திருக்கிறது. நாங்கள் அனைவரும் கூடிக்கூடி மறுநாள் மதியம் வரை பேசி என்ன பயன்? பிறகு அதன் பலனாக வாசல் கேட்டுக்கு புதிதாக இரண்டு மூன்று காவலாளிகள் (இரவு நேரத்திற்கென) நியமிக்கப்பட்டார்கள். திருட்டை முதலில் பார்த்துச் சொன்னவர்கள் என்ற பேரும் புகழும் எனக்கு கிடைத்ததா என்றால் அதுவும் தெரியவில்லை. ஹா ஹா ஹா. 

அது சரி..! இந்த வகையறாக்களை கொண்டு சென்றவர்கள் அதை என்ன செய்வார்கள்..? தெரிந்த கடைகளில் கம்மியான விலையில் தள்ளி விடுவார்களோ ? இல்லை எங்ககேனும் பிளாட்பாரத்தில் கடை விரித்து  போட்டிருப்பார்களோ? புரியவில்லை. கடை முகவரி பலகைகள் ஏதும் இல்லாது சிலசமயம் பிளாட்பாரத்தில் ஷூ, செருப்பு கடைகளை அப்போதெல்லாம் பார்க்கும் போதெல்லாம்  எனக்கு இதில் நம் வீட்டு காணாமல் போன ஷூக்களும் இருக்கும் எனத் தோன்றுவதுண்டு. ஆனால், இங்கு வந்த புதிதில் பார்த்த இக்கடைகளை இப்போது ஏனோ அவ்வளவாக காண்பதில்லை. 

அதே நாங்கள் இங்கு வரும் முன்பு ஒரு இடத்தில் வாடகைக்கு இருந்த போது, (அதுவும் மூன்றடுக்கு மாடி) இப்படியான ஒரு சம்பவம்  ஒரு இரவில் வாசலில் வைத்திருந்தில் நடந்து (எங்களுக்கு மட்டும்.) பல ஷீக்கள் செருப்புகள் மாயமாகி உள்ளது. அந்த திருட்டை எப்போது நடந்தது எப்படியென கண்டு பிடிக்கவே முடியவில்லை. காலையில் கண் விழித்ததுந்தான் பார்த்தோம் .அதுவும், அந்த வாசலில் கம்பி கேட்டுக்கு முன் அது எங்கள் பகுதியாகையால், கொடி கட்டி துணிகள் உலர்த்துவோம. அதில் பெரிய துணியாக ஒன்றை எடுத்து அதில் ஷீக்களையும், செருப்புக்களையும் வைத்து அழகாக பேக் செய்து எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். மூன்று அடுக்கு வீட்டின் மேல் மாடியில்தான் வீட்டு உரிமையாளர்கள் இருந்தனர். அவர்களும் மறுநாள் நாங்கள் விஷயம் சொன்னவுடன் "அப்படியா....! இதுவரை இப்படி நடந்ததில்லையே ..!! என ஆச்சரியபட்டார்கள். அத்தோடு போச்சு...!!" ஷீக்களையும் காலணிகளையும் நாம்தான் போட்டுக் கொண்டு நடப்போமே தவிர அது தானாகவே ஒரு போதும் நடந்து வெளியில் சென்றிருக்க முடியாது..!" என மெளனமாக அந்த விஷயத்தை ஜீரணித்துக் கொண்டோம். :)) வேறு வழி...? 

அது போல அங்கிருந்த போது ஒரு மாலை நேரம் யாரோ ஒருவர் தன் இருச்சக்கர வாகனத்தை தெருவில் ஓரமாக நிறுத்தி விட்டு, அதன் கைப்பிடியிலேயே தன்  தலைக் கவசத்தையம் மாட்டி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதையும் யதேச்சையாக ஜன்னல் வழியாக கவனித்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அக்கம்பக்கம் பார்த்தபடி வேறொருவர்  வந்து (திருட்டுத்தனமாக) அந்தக் கவசத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறொரு பக்கமாக விரைந்து  நடந்து செல்வதை பார்த்து அதிர்ந்தேன். இப்படியும் நடக்குமா? என்பதே சும்மா ரோடை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பதட்டமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது . இந்த மாதிரி கவசங்கள் அவரவர்களுக்கு பொருத்தமாகத்தான் பார்த்து  வாங்க முடியுமென அப்போது வீட்டிலுள்ளவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். பிறகு எப்படி இப்படி? 

தலைகவசங்கள் கடைகள் மட்டும் இன்றும் பிளாட்பாரங்களில் ஜோராக நடைபெறுவதை பார்க்கிறேன்.ஆனால், நேர்மையான அவர்களையும் யாரோ ஓரிருவர் இப்படிச் செய்யும் தவறுதான் இப்படியெல்லாம் சந்தேகிக்க வைக்கிறது இல்லையா ?

கடந்த வருடம் ரொம்ப நாட்களாக பதிவுகள் ஏதும் போட முடியவில்லை. இதை எ. பியில் இந்த  செய்தி அறை பகுதியில் இந்தச்செய்தி வந்தவுடன் இந்த நினைவு வந்து எழுத ஆரம்பித்தும் முடிக்கவும் இயலவில்லை. இன்னமும் எழுத நிறைய உள்ளது. மனம் இருப்பனும் மார்க்கம் அமைய வேணடாமா? அப்போது எழுதியதில் சிலதை இந்த வருட துவக்கத்தில் முடித்து வெளியிடுகிறேன். 

ஒவ்வொரு நாட்கள்தாம் இறக்கையை கட்டிக் கொண்ட மாதிரி எப்படி பறக்கிறது. அதோடு நாமும்...ஆனால், நமக்கே தெரியாத அந்த நம் இறக்கையை ரிவர்ஸில் அடித்துக் கொண்டு பறக்கும் சக்தியை இறைவன் அனைவருக்குமே  தந்தானென்றால், பழைய உறவுகளோடு (பெற்றோர், உடன்பிறந்தோர்) மகிழ்ந்திருக்கும் மகிழ்வை பெறுவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான அந்த வாழ்வையும் திரும்பவும் பெறலாம் இல்லையா?  

(என்னடா..! பதிவு சின்னதாக இருக்கிறதே என நீங்கள் ஆச்சரியத்துடன் நினைக்கும் போது, என் வழக்கமான அறுவை கற்பனையையும் அளித்து விட்ட திருப்தயும் என்னுள்.. ஹா ஹா ஹா.) 

இரண்டாவதாக நம் சகோதரி கோமதி அரசு அவர்கள் கொஞ்ச கொஞ்சமாக உங்களால் இயலும் போது பதிவுகள் ஏதேனும் எழுதி வாருங்கள் என ஊக்கம் தந்து கொண்டேயிருந்தார் . அவர் சொல்படி அப்போது எழுத ஆரம்பித்தேன். விட்டுப் போனதை இப்போது நிறைவு செய்து விட்டேன்.அவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏.

சென்ற வருடம் இறுதியில் எழுதத் தொடங்கிய இதை ஒரளவு முடித்தும் என் இளைய மகன் வரவினால், நேரம் சரியாகப் போகவே இந்த வருடம் வெளி வருகிறது. பதிவை படிப்போர்க்கும், கருத்துக்கள் தருவோர்க்கும் என் மனமார்ந்த நன்றி. 🙏. 

Sunday, January 28, 2024

தவத்தின் பலன்.

தவமும், வரமும். 

பூமி தோன்றியவுடன் புத்தம் புதிதாக  தானும் தோன்றிய, பச்சை பசேலென்று இருந்த இயற்கை வனப்புகள் அனைத்தும் காலச்சுழற்சியில் தன்  பொலிவிழந்து  மங்கி காட்சியளித்தது.  என்னதான் கால மாறுதல்கள் அதன் மதிப்பை உணராமல் சீரழிக்க தன் பெருங்கரங்கள் கொண்டு உதவினாலும்,தான் இறைவனால் படைக்கப்பட்ட போது இருந்த தன் அழகுகள் இவ்வாறு மங்குவதற்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை  இயற்கையன்னை கடவுளை சந்திக்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தன் குறைகளைச் சொல்லி அங்கலாய்த்துக் கொண்டது. 

ஒவ்வொரு வீட்டிலும், குடும்பங்கள் சில பல, இடங்களிலும் தமது முந்தைய தலைமுறைகளின் பேச்சுக்கு மதிப்பளித்து இயற்கை சம்பிரதாயங்களை போற்றியபடி வாழ்ந்து வந்தாலும், செய்கைப் பூச்சுக்கள் அந்த இயற்கையின் சாராம்சத்தை அவ்வப்போது ஆசைதீர அள்ளிப் பருகி, தன்  ஆடம்பரங்களையும், அதன் விளைவால் பார்ப்பதற்கு பகட்டாக தோற்றமளித்த பொலிவுகளையும் பிறர் பார்த்து மெச்சும்படிக்கு  தக்க வைத்தபடி வளர்ந்து, கூட்டு குடும்பங்களின் கூட்டுறவான ஆணிவேரை சற்று ஆழமாக  பதம் பார்த்துக் கொண்டும், விருட்சமாக வளர்ந்து பெருகி அசையாதிருக்கும்  தன் சுயநலத்தின் பேரில் காலூன்றியபடியும் நிமிர்ந்து நிற்கவும் தொடங்கின. 

இவ்வாறு முடக்கப்பட்ட இயற்கை அம்சங்களும்,  கடவுளை காணும் போதெல்லாம், தன் மீது காலப்போக்கில்  திணிக்கப்பட்ட செயற்கை கவசத்தை அகற்றுமாறு வேதனையுடன் வேண்டிக் கொண்டது. 

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரு நகரங்களும், கிராமங்களால் சூழப்பட்ட சிறு நகரங்களும், பெரு நகரமாக ஆசை கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் சிறு நகரங்களும், இத்தகைய சூழலில் வளரலாமா, வேண்டாமா என சீட்டுக்குலுக்கி முடிவெடுக்கும் நிலையில் உள்ள பிற பகுதிகளும், பணத்தினால் ஏற்படுத்திக் கொள்ளும்  வசதிகள் ஒன்றையே பிரதானமாக கொண்டு வளர்ந்து, பெருநகரங்கள், கிராமங்களான நகரங்கள் அனைத்தும் வெவ்வேறு பல நாடுகளாகி, தங்களுக்குள் பல பிரிவுகள் ஏற்படுத்திக் கொண்டு, மனிதர்களின் கலாசாரம், பண்பாடு இவற்றை மாற்றியமைப்பதே தன் குறிக்கோளாக்கி, பூமிக்குள்ளேயே பிரிந்து போய் சந்தோஷப்பட்டுக் கொண்டது

இப்படி பிரிந்த பண்பாடுகளில் மக்களின் ஆர்வங்கள் காரணமாக யார் உயர்ந்தவர்கள்/தாழ்ந்தவர்கள் என்ற விகிதாசாரங்களில் பூமி செய்வதறியாது திகைப்புற்று திணறி கொண்டிருந்தது. மனிதர்கள் காலம் தந்த வசதியினால் ஒருவரை ஒருவர் இழிந்தும், பகைத்தும்  கொண்டார்கள். ஏழ்மை, வறுமை பகைமை பேதமை போன்றவைகள் உருவாயின

பணத்துக்காகவும், அது தந்த வசதிகளுக்காகவும் மனிதர்கள் எந்த பாதகங்களையும்,  அஞ்சாமல் செய்தார்கள். இது போக சுயநலங்கள் என்றவொன்று அவர்களின் இயல்புகளாகிப் போயின. தோன்றியவுடன் இயற்கையிலேயே அவர்களுடன் தோன்றிய பாசம், பந்தம், கடமை என்பதெல்லாம் வெறும் புரளி, கற்பனை என்ற மனோபாவங்கள் எளிதாக அவர்களிடம் குடி புகுந்தன. விலங்குகளின் குணங்களோடு மனித மனங்களும் ஒத்துப் போவதை கண்டு விலங்குகளே சில சமயங்களில் அதிர்ச்சியடைந்தன. 

இயற்கை தன் வலுவிழந்த போதும், இயற்கை மாறி கலாசாரங்களின் விதி முறைகள் மாறிய போதும், மனிதர்கள் தன்னையொத்த  மற்றவர்களால் வஞ்சிக்கப்படும் போதெல்லாம் எழுந்த வேதனை ஒலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொஞ்ச கொஞ்சமாக ஒரு" மாய உருவம்" திடகாத்திரமாக வளர்ந்து வந்தது. "அது" தன் நிலையில் என்றும் அழிவில்லாமல்  நிலைத்திருக்க வேண்டி இறைவனை நோக்கி கடுமையான  தவம் செய்ய ஆரம்பித்தது.

 ஆழமான "அதன்" தவத்தைக்கண்ட இறைவன் அதன் முன் காட்சியளித்து "நீ வேண்டும் வரம் என்ன?" என்றார். "முதலில் எனக்கு அழிவில்லாத வரம் வேண்டும். நான் வேதனைகளிலிருந்து பிறந்து வந்திருக்கிறேன்.அதனால் நான் யாரை அண்டி தீண்டினாலும், அவர்கள் வேதனையடைய வேண்டும்." என்றது.  சரி.. ! அவ்வாறே ஆகட்டும்... "என்றபடி வரத்தை தந்து விட்டு இறைவன் மறைந்தார். 

மீண்டும் முன்னைவிட பலத்துடன் "அது" பலகாலம் இறைவனை நோக்கி தவமிருக்கவே வந்த இறைவன் "இப்போது எதற்காக என்னை நினைத்து தவமிருந்தாய்?" எனக் கேட்கவும், "இன்னமும் என் தவங்கள் பூர்த்தியாகவில்லை. வரங்களும் என் விருப்பமான முறையில் கிடைக்கவில்லை." என "அது" குறை கூறவே "இப்போது சரியாக கேட்டு பெற்றுக் கொள்" என இறைவன் கூறவும்  "நான் உனக்கு நிகராக செயல்பட வேண்டும்... உன்னைப் போல் உயிர்களை படைப்பதில் எனக்கு சிறிதும் ஆர்வமில்லை. . ஆனால்  அழித்தலில் என் வஞ்சம் தீரும்படி என்னைக் கண்டு மானிடர் அனைவரும் அஞ்சி நடுக்க வேண்டும். இயற்கையை இழிந்த பாவத்திற்கு, அவர்களுக்கு வரும் இயற்கை முடிவு என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் திணரும் நிலை என்னால் உருவாக்கப்பட வேண்டும். என்ற "அதன்" குரலில் இருந்த காட்டமான வெஞ்சினத்தைக்கண்டு இறைவனே சற்று மன தடுமாற்றத்துடன் கலக்கமுற்றார்.  

"ஏன் இந்த வரம்.? மானிடர்களுக்கு அவரவர் விதிப்படி, நன்மை, தீமைகளை பெற்று வாழும் நிலைதான் அவர்கள் பிறந்தவுடனேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டதே..! மேலும் தவறுகள் செய்யாதவர்களும் தண்டனை அனுபவிப்பது நீதிக்கு புறம்பானதல்லவா...! அப்படியிருக்க இந்த வரத்தை நான் எப்படி உனக்குத் தருவது?" என்றார் இறைவன். 

அப்படியில்லை...! வேதனைகளிடமிருந்து பிறந்த என் நோக்கம் மானிடர்களை துன்புறுத்துவதுதான்.. . அதற்காகத்தான் இப்படி கடுந்தவமிருந்து வருகிறேன். இந்த வரம் நீ தராமல் போனால், இன்னமும் கடுந்தவமியற்றுவேன். எப்படியும் என் தவத்தின் பலனுக்கு பரிசளிக்க நீ வந்துதான் ஆக வேண்டும். . அதுதான் வழக்கமான தவத்தின் நியதி..."என்று ஆக்ரோஷமாக"அது" கூச்சலிட்டது.

" அது" கேட்ட வரங்களை வேறு வழியின்றி தந்த இறைவன்," சரி இனி என்னை அழைக்காதே.. " என்றபடி செல்ல முற்பட்ட போது, தடுத்து நிறுத்தியது "அது" ...   "இரு..இரு... இவ்வளவு பராக்கிரமங்களை பெற்ற எனக்கு ஒரு நல்ல பெயர் இல்லை பார்...அதையும் உன் வாயால் வைத்து அழைத்து விடு... இந்த வரத்தையும் தந்து விட்டு போ..." என்று வேண்டவும், "இதோ பார்....உன் தவத்தை மெச்சி உனக்கு வேண்டும் வரங்களை தந்தாகி விட்டது. இதுவும் என்னையும் மீறி தன்னிச்சையாக நடைபெற்ற செயல். இதில் உனக்கென ஒரு பெயர் வைத்து அழைக்கும் மன நிலையில் நான் இல்லை. உன் விதிப்படி உனக்கான பெயரை நீ விரும்பி நாடும் மானிடர்களே வைத்துக் கொள்வார்கள். இனி நீ அழைத்தாலும், உன்னால் சிரமப்பட்டு மன/உடல் நோகும் மானிடர்களே அழைத்தாலும் நான் வருவது சிரமமே.... ஏனெனில் இது விதியின் உக்கிர பிரவேசம்.  இந்த பிரவேசத்தில், பிரபஞ்சத்தில் அதன் வீரியங்களை யாராலும் தடுக்க இயலாது. உன் இந்த தவங்களும், வரங்களும் அது தீர்மானித்தவை. இதற்கு ஒரு முடிவென்பதையும் அதன் நேரம் வரும் போது அதுவேதான் தீர்மானிக்க வேண்டும். அப்போது அதன் அழைப்பில் பக்கபலமாக நான் அனைவரையும் காக்க அதனுடன் வருவேன். அப்போது நீ பெற்ற வரங்கள் பலனற்றுப் போகலாம். உன் பராகிரமங்கள்  தூள் தூளாகிப் போகலாம். எனவே இனி என்னை மறுபடியும் அழைக்கும் முயற்சியில் அடிக்கடி இறங்காதே. . " என்று சற்று கோபத்துடன் சொன்ன  இறைவன்  அடுத்த நொடியில் மறைந்தார். 

தவத்தினால் பெற்ற வரங்களை விதியின் வருகையை ஒரு பக்கம் எதிர்பார்த்தபடி, செயலாற்ற தொடங்கியது" அது."  அதன் பிடியில் அதன் வேண்டுதல்படி சிக்கி மானிடர்கள் மீள வழியின்றி தவித்தனர். செய்த, வினைகள், செய்யப்படுகிற வினைகள் செய்யப் போகும் வினைகளின் விளைவுகள்  இப்படி எதற்கும் அஞ்சாத மானிடர்கள், இதற்கு அஞ்சி ஒளிந்து கொண்டனர். "அது"வும்  இறைவன் கூற்றுப்படி தனக்கு மனிதர்களாலேயே ஒரு பெயர் கிடைத்த மகிழ்வில், தன் அரக்கத்தனமான செயலின் விபரீதத்தை பற்றி சிறிதும் கவலையில்லாமல், "அலை, அலையாக "அதனுள் எழுந்த  சந்தோஷங்களில் மூழ்கியபடி பூமியில் உலா வந்தது. 

 நாமும் இறைவன் வரவு குறித்தும், "அது" முற்றிலும் அழியப்போகும் தருணம் குறித்தும் இறைவனை மனமுருக சிந்தனையில் இருத்தி வேண்டிக் கொண்டேயிருப்போம். எத்தனை தூரம் "அவனால்" படைக்கப்பட்ட மானிடர்கள் துன்புறுவதை பொறுப்பான் "அவன்." 

அந்த விதியும், "அவன்" மனவருத்தம் உணர்ந்து, அவன் சொல் கேட்டு விரைவில் மனம் மாறி அவனுடன் இணைந்து வரும். நம்புவோம். 🙏. 


மனதின் வேதனைகளில் இந்தப் பதிவை எப்போதோ இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எழுதினேன். இதில் ஏகப்பட்ட  மாற்றங்கள் இப்போது வந்திருக்கலாம். இப்போது இந்த நோயைப் பற்றிய பயங்கள் மக்களுக்கு பழகி விட்டதென்றாலும், அது மறுபடி, மறுபடி எழுந்து வந்து "நான் இன்னமும் இருக்கிறேன்" என்றபடி  பயமுறுத்திப் போகிறது. நெருக்கடியான சூழல்களில், மக்கள் கூட்டம் அலை மோதும் பிரதேச பகுதிகளில் மீண்டும் முகம் மூடி அலைய வைக்கிறது. தோன்றியதிலிருந்தே இயல்பாக வரும் சாதாரண ஜலதோஷங்கள் கூட நீடித்து பலவிதமான  தொந்தரவுகளைத் தந்தபடி அதன் பெயரை நினைத்து தடுமாற வைக்கிறது. ஆனாலும், ஆண்டவன் மேல் நாம் எந்நாளும் கொண்டிருக்கும் நம்பிக்கையை  தவிர்க்காமல்  இருந்தால் நல்லது. 

இந்தப் பதிவை படித்து அருமையான இந்தப்பாடலை கேட்பவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் .. 🙏...