Thursday, October 30, 2014

முருகனருள் முன்னிற்பதாக..!!



கணபதித்தாழினைப்போற்றிடுவோம்..! 
கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம்.! 
முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம்.! 
மூச்செல்லாம் அவனென்று உணர்ந்திடுவோம்.!
 
 
என்னை இதை எழுத வைத்த தமிழ்க்கடவுளாம், முருகனுக்கு முதலில்           என் பணிவான வணக்கங்களுடன் ௬டிய நன்றிகள்.! அவன் பாதத்தை,           என் சிரமேற்சுமந்தபடி பக்தியுடன் இப்பதிவை தங்கள் முன்வைக்கிறேன்.!      என் சித்தத்தில் உதித்ததை சிவபாலனோடு, சிறிதளவு பகிர்ந்துள்ளேன்.!              சிரத்தையுடன் படிக்கும் அனைவருக்கும் நன்றி.!


 












    வேழமுகத்தவனின், தம்பியாம் முருகனின் பெருமைகள் சொல்லிலும் அடங்காது.! சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீச்சுடரின் வடிவத்தில் உதித்த முருகனை, அத்தீச்சுடரின் வெப்பம் தாங்காது, தேவர்கள் சரவணப் பொய்கையில் விட்டதும், முனிவர்கள், விண்ணோர்கள் அதிசயிக்கும் வண்ணம், அங்கிருந்த ஆறு அழகிய தாமரைமலர்களில், ஆறு அழகுள்ள குழந்தையாக தவழ்ந்து பின் கார்த்திகைப்பெண்கள் அறுவரின், பராமரிப்பில் வளர்ந்து வந்தார் முருகப்பெருமான்.! சரவணப்பொய்கையில் அவதரித்ததால், சரவணன் என்ற பெயருடன் விளங்கினார்.

  
ஒரளவு வளர்ந்தநிலையில். ஒருநாள் அவர் தாய் உமாதேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கும் நோக்கத்தில், சரவண பொய்கைக்கு வருகை தந்து, வாஞ்சையுடன் ஆறு குழந்தைகளையும் ஒன்றாக சேர்த்து அணைத்ததும், ஆறுமுகங்கள் கொண்ட ஒரே குழந்தையாக மாறி, ஆறுமுகன், உமைமைந்தன் என்னும் பெயர்களுடன் தாயின் செல்லக்குழந்தையாக சிவ லோகத்தில் வளர்ந்து வந்தார்

 
 எவராலும் வெல்ல முடியாத அரக்கர்கள் சூரபத்பன் அவன் தம்பிகள் சிங்கமுகாசூரன், கஜமுகாசூரன், தாருகாசூரன் இவர்களை வேரோடு அழிப்பதற்கென்றே, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, அவர் மகனாக அவதரித்த முருகப்பெருமான், தான் வளர்ந்து வாலிபத்தை எட்டுமுன், சிறு வயதின் குறும்புகளை ஒவ்வொரு திருவிளையாடலாக நடத்தி உள்ளார்


 



















தாய் தந்தையிடமிருந்து அற்பத மாங்கனியொன்றை பெற தன் அண்ணன் விநாயகருடன் போட்டியிட்டு, அதை அவர் சுலபமாக பெற்று விட்டதை காரணங்காட்டி, விளையாட்டுத்தனமாய் கோபம் கொள்வது போல் தோற்றமுறச்செய்து, சிறுவயதிலேயே, தன் தனித்துவத்தை நிலைநாட்ட, தனக்கென்று ஓர் இடமாய் பழனியில், தன் புகழைப் பரவச் செய்து அறுபடையில் முதலிடமாய் விளங்கும்பழனி மலையில்பாலதண்டாயுதபாணி என்ற பெயருடன் சென்றமர்ந்தார்

படைக்கும் கடவுளாம் நான்முகரிடம் பிரணவத்தின் சரியான பொருள் கேட்டு, அதற்கு அவர் அளித்த விளக்கம் தவறென வாதித்து, அவரை சிறையிலடைத்துவிட்டு, பின் படைக்கும் தொழிலையே தன் பணியாக செய்து வர, அதனை தட்டிக்கேட்ட தன் தந்தை சிவபெருமானிடமே, பிரம்மனின் தவறினை விளக்கி, தந்தைக்கே குருவாகி, பிரணவத்தின் அரும் பொருளுணர்த்தி, “சுவாமி மலையில்தந்தைக்கு உபதேசித்த ஞானகுருவாய் அருள்பாலித்தார்.
 

 அரக்கர்களை வீழ்த்தும் அவ்வேளை வந்ததும், தந்தை தாயிடம் ஆசிப்பெற்று, தந்தை தாய் அளித்த சிறப்பான ஆயுதங்களை கைகளில் ஏந்திக்கொண்டு, சூரபத்பனை, மற்றும் அவன் தம்பிகளையும், அரக்க குலத்தோடு வேரருக்க, பலநாட்கள் போரிட்டு  சூரசம்காரம் முடித்து தேவாதிதேவர்களுக்கு சங்கடங்கள் களைந்து, “திருச்செந்தூரில் இந்திரனின் மகளாக அவதரித்திருந்த தெய்வயானையை தேவர்களின் விருப்பத்திற்கு இணங்கி மணமுடித்த மகிழ்வில் கடற்கரையோரத்தில், செந்திலாண்டவராய் சிறப்பாக காட்சி தந்தார்.

 
சகோதரிகள் இருவரையும் தான் மணந்து கொள்கிறேன் என்று அவர்களின் முன் ஜென்மத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்காக திருப்பரங்குன்றத்தில்தெய்வயானையோடு தேவர்களின் குறைத்தீர்த்து அருளாட்சி செய்து கொண்டிருந்த முருகப்பெருமான், பின் காலம் கனிந்து வந்தவுடன் வேடர் குலத்திலுதித்த வள்ளியை மணமுடிந்துதணிகைமலையில் அனைவருக்கும்  அருள் பொழிந்தபடி இருந்த போது, தமிழ்ப்புலவராம் ஔவை பிராட்டியாரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி தன் இரு மனைவிமார்களுடன், “பழமுதிர்ச்சோலையில்காட்சி தந்து, ஔவை பிராட்டிக்கு வேண்டும் வரங்கள் தந்தருளினார்.!

      இப்படி பிறப்பிலிருந்து ஏராளமான அதிசய செயல்களை விண்ணோரும், மண்ணோரும் மனம் மகிழும் வண்ணம் செய்து காட்டிய வீரவேல் வடிவேலனை  நாமும் எப்போதும் வீழும் பொழுது வரைத் துதிப்போம்.!


முருகன் என்றாலே அழகு.! அந்த அழகனுக்கு நிறைய பெயர்கள்.! முருகா, கந்தா,கடம்பா, கார்த்திகேயா, வடிவேலா, சரவணா, ஆறுமுகா, மால்மருகா, வள்ளிமணாளா, ஞானபண்டிதா, உமைமைந்தா என்று எத்தனையோ பெயர் சொல்லி அழைத்தாலும், நம்குறை தீர்க்க ஆறு தாமரை மலர்களில் அவதரித்து, ஆறுபடை வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும், அந்த ஆறுமுகத்தவன், பன்னிருகைவேலவன், பன்னிருவிழியழகன், தயாள சிந்தையுடன் நம் குரல் கேட்டு ஓடி வந்து காத்தருள்வார்.!


 அந்த கந்தனுக்கு வருடந்தோறும் ஐப்பசி மாதம், அமாவாசை முடிந்த மறுநாள் பிரதமை திதியிலிருந்து ஆரம்பித்து ஆறுநாட்கள் கந்தசஷ்டி விழா கொண்டாடி, ஆறாவது நாள் சூரசம்ஹார விழாவாக அனைத்துப் பெருபான்மை முருகன் கோவிலிலும் கொண்டாடுவது வழக்கம்.! திருச்செந்தூரில் இந்த விழா மிக மிகச்சிறப்பாக நடைபெறும்.! அதைக் கண்டு களிக்க அங்கிருக்கும் கடலை விட பெரிதாக ஒவ்வொரு வருடமும் மனிதக்கடல் ௬டும்.! நம் மனதிலும் எழும் கோபம், போட்டி பொறாமை, சூழ்ச்சி வஞ்சனை, போன்ற கெட்ட குணங்களாகிய அரக்கர்களை, முருகனது நாமங்கள் என்ற ஆயுதங்கொண்டு வதைத்து, நாமும் இச்சஷ்டி விழாவைப் போற்றிக் கொண்டாடி பேரின்பம் அடைவோமாக.! அதற்கும் அந்த முருகனருள் துணையாக எக்காலமும்   இருக்க வேண்டுவோமாக.!


வாழ்க.! மனிதருக்கு உதவும் மனித நேயங்கள்.!

வளர்க.! மனிதருள் மரிக்காத தெய்வ சிந்தனைகள்.!   

  
படங்கள் ------- ௬குள்.!  நன்றி.!