Sunday, June 14, 2015

அமிர்தம்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைந்த சரிதம்.

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை மிகுதியாக, அசுரர்களால் தேவர்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். எதிர்த்துப் போரிட சக்தி இல்லா தேவர்கள் ௯டி யோசிக்கும் போது, பிரம்மன், இந்திரன், நாரதர் போன்றோர் தேவர்களின் நன்மையை உத்தேசித்து, “பாற்கடலை கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால், தேவர்கள் மிகுந்த பலமடைவர்அதன் பின் அவர்களை ஜெயிக்க யாராலும் இயலாது.!” எனச் சொல்ல, தேவர்கள் பாற்கடலில் அமிர்தம் கடையும் யோசனைக்கு சம்மதித்தனர். ஆனால், பலமுடன் இருக்கும் அசுரர்களும் தங்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தால், காரியம் விரைவாகவும், சுலபமாகவும் முடியும் என தேவர்கள் அனைவரும் ஏக மனதாக நினைக்க தேவர்கள் சார்பில் அசுரர்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது

அழைப்பை பெற்ற அசுரர்களும் ஒன்று ௯டி, இந்த தேவர்களுக்கு உதவுவது போல் நாமனைவரும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து அமிர்தம் கடைவோம். அமிர்த கலசம் கையில் கிடைத்ததும், தட்டிப் பறித்துக் கொண்டு, அதன் பலனை முழுவதுமாக நாம் அடைந்து விடலாம். ஏற்கனவே பலமிழந்த தேவர்களுக்கு ஒரு சொட்டு ௯டத் தராமல் நாமே அனைத்தையும் உண்டு விடலாம். பாவம் தேவர்களுக்கு வேலை மட்டும் மிஞ்சும். அமிர்தம் முழுவதும் நமக்குத்தான்.! அதன் பின் அமிர்த பலத்தின் பெரும் உதவிகொண்டு அவர்களை அடித்துத் துரத்தி விட்டு மூவுலகத்தையும் நாமே ஆண்டு வரலாமென", அசுரர்களின் குரு சுக்ராச்சாரியாரின் முன் அழகாய் முடிவெடுத்தனர்.

மஹா விஷ்ணுவின் உறைவிடமாகிய திருப்பாற்கடலில், அமிர்தம் கடைய அவரின் அனுமதியோடு, “அமிர்தம் உங்களுக்குத்தான்.! அசுரர்களின் முழு உழைப்போடு அவர்களின் கண் முன்னாலேயே, அமிர்தம் மொத்தமும் உங்களை வந்தடையும். கவலை வேண்டாம்.! " என்ற பரந்தாமனின் ஏக  ஆசியோடு, தேவர்களும், அசுரர்களும் ஒன்று கலந்து குறிப்பிட்ட வேளையில் ஒரு மனதாக இறங்கினர். பெரிய மலையாகியமந்திர கிரியைமத்தாக அமைத்துக்கொண்டு. பரமேஷ்வரனின் கழுத்தை அலங்கரிக்கும் நாகாபரணமாகியவாசுகிஎன்ற பாம்பை கயிறாகக் கொண்டு, நல்லதொரு நாளாம் தசமி திதியன்று, மும்மூர்த்திகளையும் தொழுதவாறு தேவர்கள் அமிர்தம் கடையத் துவங்கினர்.


ஒரு கால கட்டத்தில் மந்தரகிரி மலை பாற்கடலில் மூழ்கத் தொடங்க, தேவர்கள் எம்பெருமான் நாராயணனைத் துதிக்க, மகாவிஷ்ணு பெரும் ஆமை வடிவை எடுத்து மந்தரகிரியின் அடிபாகத்தை தன் முதுகில் தாங்கிப் பிடித்தவாறு மலை மூழ்குவதை தவிர்த்து நிறுத்தினார். இதுவே அனைவரையும் காப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரமாகிய ௯ர்ம அவதாரம் ஆகும். தேவர்கள் நாராயணனை மேலும் துதித்தபடி தெய்வ சிந்தனையுடன் இருந்தனர்.

வாசுகியின் சிரமத்தைக் குறைக்க அதன் வால் பகுதியை பிடிக்கச் சொல்லி அசுரர்களை தேவர்கள் கேட்டுக்கொண்டும், ஆணவத்தின் பிடியிலிருந்த அசுரர்கள் அதைக் கேளாது வாசுகியின் தலைப் பகுதியை பிடித்துக் கொண்டனர். அவர்களின் அசுர பலத்தின் அழுத்தமும், மூர்க்கதனமாக இழுக்கும் வேதனையும் பொறுக்காது, எரிக்கும் விஷத்தை வாசுகி கக்கியது. மூவுலகினையும், அழிக்கும் ஆலகால விஷமாக அது பரவி உருவாக, அதன் பிடியிலிருந்து தப்பிக்க, அனைவரையும் காத்தருள சர்வேஸ்வரனை தேவர்கள் துதித்துப் போற்ற, கைலாய நாதனாகிய ஈஸ்வரன் அந்த விஷத்தை எடுத்து வருமாறு நாயன்மார்களில் ஒருவரான சுந்தரருக்கு ஆணைப் பிறப்பிக்க, சுந்தரர் விரைந்து பாற்கடல் சென்று அந்த விஷத்தை தன் சக்தியினால், உருட்டி நெல்லிக்கனியளவு கையில் ஏந்தி வந்து சர்வேஸ்வரரிடம் சமர்ப்பித்தார்.
சுந்தரர் கொண்டு தந்த விஷத்தை யாருக்கும் தொந்தரவின்றி அழிக்க எண்ணம் கொண்ட ஈஸ்வரன் தன் வாயிலிட்டு அமுதமென விழுங்கினார். அவர் வயிற்றினில் இருக்கும் அண்ட சராசரங்களையும் அதில் வாழும் எண்ணற்ற கோடி ஜீவன்களையும் காக்க வேண்டிஇறைவனின் அருகிலிருந்த பார்வதி தேவி சட்டென தன் திருக்கரத்தால், நாதனின் கழுத்திலேயேவிஷம் அமிர்தமாக மாறட்டும்என வேண்டிக்கொண்டு அவர் கழுத்தை தடவ தேவியின் வேண்டுதலால், விஷம் அமிர்தமாக மாறி ஈஸ்வரனின் திருகழுத்தை கருநிறத்தோடு அலங்கரித்தது. அன்றிலிருந்து இறைவன் "திருநீலகண்டன் எனப் பெயர் பெற்றார். இப்படியாக அவ்விஷமானது இறைவனுக்கும் சிரமம் ஏற்படுத்தாது, எவ்வுயிருக்கும் ஆபத்தை விளைவிக்காது அழிந்து போனது.


பாற்கடலிலிருந்து அனேக விதமான ஔஷதங்கள் உதயமாகி, தேவந்திரன் மகாவிஷ்ணு, மற்றும் அனேகரிடம் தத்தம் விதிப்படி சரணடைந்தன. இறுதியில் அமிர்த கலசம் ஏந்தி மகாலட்சுமி பாற்கடலிலிருந்து உதயமாக, தேவர்களுடன் போரிட்டு ஜெயித்து அக்கலசத்தை அசுராள் பிடுங்கிச் சென்றார்கள். தேவர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்க, மகாவிஷ்ணு மாயையாகிய மோகினி அவதாரத்துடன் வந்து அசுரர்களை மயக்கி ஏமாற்றி, பின் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறி அவர்களின் தேக பலக்குறையை நிவர்த்தி செய்தார். அதில் சுவர்பானு என்பவன் அசுரனாக இருந்தாலும் மகாவிஷ்ணுவின் சூழ்ச்சி புரிந்து தேவர்கள் போல் உருமாறி சூரிய, சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து அமிர்தம் பருகினான். அப்போது மோகினி உருவத்திலிருந்த மகாவிஷ்ணுவுக்கு சூரிய, சந்திரன் அவன் அசுரன் என குறிப்பால் உணர்த்த அதைப் பார்த்த மகாவிஷ்ணு தன் கையிலிருக்கும் அகப்பையால் அவன் தலையை கொய்து எறிந்தார், தலை வேறு , உடல் வேறாகினும் அமிர்த பலத்தால் உயிருடனிருந்த சுவர்பானு பின் மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு வேண்டி விமோசனமும் வேண்ட, மனமிறங்கி மகாவிஷ்ணு அவர்களின் அங்கஹீனமான உருவத்தை திருத்தியமைத்து உடலிழந்த உருவத்திற்கு பாம்பின் உடலையும், தலை இல்லா உடலுக்கு பாம்பின் தலையையும் தந்து ராகு, கேதுஎன்ற பெயருடன் இன்றளவும், நவகிரகங்களில் அவர்களும் ஒன்றாகும் அருளைத் தந்தார் .

தேவர்களுடன் இணைந்து அமிர்தம் பருகிய காரணத்தால், ராகுவும், கேதுவும் தங்களின் அசுர குணம் மறைய பெற்றவர்களாய், மற்றைய கிரகங்களுடன் இணைந்து மக்களுக்கு அவரவர் வினைக்கேற்ப நல்லதைச் செய்து வருகின்றனர். ஆனாலும், சூரிய, சந்திரன் காட்டிக் கொடுத்தமையால்தான், விமோசனம் பெற்றாலும், தன் தேகம் வித்தியாசமான தோற்றத்துடன் இருவேறாக ஆகியது என்ற ஒரு மனக்குறையில், மன விரோதத்தில்  சுவர்பானு ஆண்டுதோறும், அவர்களை உலகத்தில் பயணிக்கவிடாது ஒரிரு முறைகள் தன் சக்தியைக் கொண்டு மறையச்செய்ய வரம் பெற்றதாகவும், அந்நிகழ்ச்சியே, சூரிய, சந்திர கிரகணமென்றும் புராணங்கள் உறுதிப் படுத்துகின்றன.


இந்த தேவர்கள் அமிர்தம் உண்ட சரிதத்தை நான் விவரித்து எழுத வேண்டுமென  நினைத்ததின் காரணம், நான் ஒரு செய்தியை படித்ததுதான். அன்று ஈஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை அழிக்காது பெருகவிட்டால் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து என்பதற்காக  நமக்காக அதை தானே உண்டு அது அமுதமாக மாறி, திருநீலகண்டர் எனும் காரணப் பெயருடன், திருவிளையாடல் புரிந்து அனைவரையும் அன்போடு காத்து ரட்சித்தார் என்கிறது வியக்க வைக்கும் புராணங்கள்.
ஆனால் இன்று அமுதமாய் இனிக்கும் ஒரு உணவே ஆலகால விஷமாய் மாறி ஓர் உயிரை மாய்த்த சம்பவத்தை குறித்த ஒரு செய்தியை கண்ட அதிர்ச்சியில்  (வாட்சப்பில் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வந்த ஒரு செய்தி.) காலத்தின் கோலம் இப்படி மாற்றி விட்டதே என்ற வருத்தத் தோடு அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அந்தச் செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
                
                  இருப்பினும், வந்த அந்தச்செய்தி இதோ….

நண்பர்கள் கவனத்திற்கு...படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்....................
தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...

                                                                               படித்ததற்கு நன்றிகள்....

Friday, June 5, 2015

இனிப்புடன் ஆரம்பம்...



வலைத்தளம் ஆரம்பித்து எழுத (கிறுக்க) வந்த போதே  என் தமயந்தி பாகத்தையும்  (ஆண்கள் சமையல் என்றால் நள பாகமாகும் போது பெண்களின் சமையலை தமயந்தி பாகம் என்று சொல்லக்  ௬டாதா..? ) அவ்வப்போது வெளியிட எண்ணம் கொண்டேன். ஆனால் அது உண்மையாகவே தமயந்தி பாகமாகிவிட்டால் என்ன செய்வது என அமைதி காத்து விட்டேன். (ஏனெனில், அரச குடும்பத்தில் பிறந்து செல்வ செழிப்பில் வாழ்வின் முதல் அத்தியாயத்தை கழித்த தமையந்தி சமையல் அறையே எவ்விடம் உள்ளது என அறியாதவளாகத்தானே இருக்க முடியும். அதன் பின்புதானே சமைப்பது..!) ஆனால் அரசனாகப்பிறந்தும், விதியின் பரிசாக ஆய கலைகள் அறுபத்திநான்கிலே ஒன்றான சமையல் பக்குவத்தில் கைமணமாக செய்து முடிக்கும் திறன் நளனிடம்  இயல்பாகவே வரப்பிரசாதமாக குடி கொண்டிருந்தது. நளனுக்கு நிகர் வேறு யாருமில்லை (இன்றளவும்) என்னும் வண்ணம் நள பாகமென்றஅடை மொழி அந்த அரசனிடமிருந்து சுவையாக சமையல் செய்யும் அனைவரிடமும்  ஆண் பெண் பேதமின்றி ஒட்டிக்கொண்டது. ஆனால் சந்தர்ப்பவசத்தால் ஆண்கள் உணவு தயாரிக்கும் போது பொதுவாக “இன்று நள பாகந்தான்என்று அலுத்துக் கொள்வது மாதிரி சொல்லிக்கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் சுவையான பாகந்தான்நள பாகம்”. அந்த மாதிரி சுவையான உணவு கலையில் பல சகோதரிகள் வலைத் தளத்தில் கலக்கி கொண்டிருக்க, என் சமையல் குறிப்புக்கள் தமையந்தி பாணியில் அமைந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் இது நாள்வரை கைகளை கட்டி விட்டது. இன்று ஒரு மாற்றத்திற்காக இந்தப்பதிவில் என் சமையலையும் சற்று இனிப்பாக ஆரம்பிக்கட்டுமா.?
வேறு வழியில்லை.! சகித்துதான் ஆகவேண்டும். விதிதான் அவ்வளவு சுலபமாக எல்லோரையும் விட்டு விடுமா என்ன.? (உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.)


மைசூர் பாகு….


 கடலை மாவு சலித்தது இரண்டு கப்

சர்க்கரை நாலு கப் (மாவுஒன்றுக்கு இரண்டு சர்க்கரை என்ற கணக்கில் சொல்லியுள்ளேன். இனிப்பு அதிகம் தேவைபடுகிறவர்கள்  ௯ட அரைக் கப் எடுத்துக் கொள்ளலாம்.)

நல்ல நெய் இரண்டு கப் (அவ்வளவு கொழுப்பா உனக்கு ..?என்று என்னை கேட்பவர்கள்) அதிகம் என நினைத்தால் அரைக் கப் குறைத்துக் கொள்ளவும். வாயில் போட்ட மறுநிமிடம் கரைய வேண்டுமென நினைத்தால் அந்த மாதிரி கேள்வி ஏதும் கேட்காதீர்கள்.!

ஒரு வட்ட( ஓவல் ) வடிவ சற்று ஓர விளிம்பு உயரமாக உள்ளத் தட்டில் (அதன் விளிம்பின் சுவர்களில் நன்கு படியுமாறு ) தட்டு முழுவதும் உட்பக்கம் நெய் விட்டு பரவலாக தடவி வைத்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான் ! இனி மைசூரை (ஊரை இல்லைங்க) கிண்ட போகலாமா?

கடலை மாவை ஒரளவு பச்சை வாசம் போகும் வரை சற்று நிறம் மாறும் வரை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். அதை ஒரு தட்டில்  கொட்டிக் கொண்டு அதே கடாயில் சர்க்கரையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து அது மூழ்கும் வரை (ஒரு கப்) தண்ணீர் விட்டு கிளறினால் சற்று நேரத்தில் சர்க்கரை கரைந்து கொதி வரும். அப்போது வறுத்து வைத்திருக்கும் கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். இரண்டு கலவையையும் சேர்ந்து கை விடாது கிளறும் போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற கிளற இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக வரும் போது, ஏற்கனவே நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி சமன்படுத்தி சற்று ஆறிக் கொண்டுள்ள போதே, வில்லைகள் செய்து வேறு ஒரு பெரிய தட்டில் அதை கவிழ்த்தால், சூடான சுவையான மைசூர் பாகு கட்டிகள் தயார்.

இந்த மைசூர் பாகு இருக்கிறதே.! அது வாயில் விண்டு போட்டால், (முதலில் விண்டு போடும் அளவுக்கு இலகுவாக இருக்க வேண்டும். கை விரல்களின் எலும்பை உடைத்து விடும் அளவுக்கு இரும்பை ஒத்ததாக இருக்க ௯டாது. கிளறும் போது விள்ளும் பதத்தை அதுவோ, இல்லை நாமோ கொஞ்சம் மறந்து விட்டாலும் இரும்பு கட்டிகளாகும் நிலை சாதாரணமாக சொல்லிக் கொள்ளாமல் உருவாகி விடும். எனவே எச்சரிக்கை.!) வாயில் கரைய வேண்டும். கண்கள் இரண்டும் கடாயிலிருக்க கவனம் முழுதும் மைசூரில் இருக்க வேண்டும். நான் சொல்வது நாம் செய்யும் மைசூர் பாகில்இருக்க வேண்டும். அதை விடுத்து சென்ற தடவை சென்று வந்த எழில் மிகும் பிருந்தாவனத்தையும், அருள் தரும் சாமுண்டிஸ்வரி கோவிலையும், கண் கவரும் அரண்மனை அழகையும், இன்னும் விழிகளில் மிச்சம் மீதி இருக்கும் உண்மையான மைசூர்அழகையும் அசை போட்டபடியிருந்தால், மைசூருக்கே சென்று கல் கொண்டு உடைத்தாலும் நாம் செய்யும் மைசூர் பாகு உடையாது. (இப்படி ஆதியில் யாராவது செய்து பார்த்துதான் இதற்கு இந்த நாமகரணம் உருவானதோ என்னவோ.? அது வேறு விஷயம்.)

அந்த காலத்தில் முன்பெல்லாம் வார மாத பத்திரிக்கை இதழ்களில் தீபாவளி சிரிப்பு வெடிகள் என்றால், புது மாப்பிள்ளையும், இந்த மைசூர் பாகும்  அனாசயமாக இடம் பெற்று விடும்.

அந்த வகையில் ஒரு நகைச்சுவை 
தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டாடி விட்டு தன் வீட்டிற்கு திரும்பும் போது கணவன் மனைவியிடம் ௬றுகிறான்.

நான் தீபாவளிக்கு எதிர்பார்த்து வந்த மாதிரி உங்க வீட்டிலே சீர் செனத்தி ஏதும்தான் கிடைக்கலே. விரல்லே இருக்கறதே தெரியாத மாதிரி ஒரு மோதிரமும், ஊர் போய் சேர்றதுக்குள்ளே கிழிய மாதிரி ட்ரெஸூம் எடுத்து கொடுத்து உங்க அப்பா தீபாவளியை ஓட்டி விட்டுட்டார். உங்கம்மா செஞ்ச தீபாவளி பலகாரத்துலே, அந்த மைசூர் பாகையாவது ஒருநாலு ௬ட கேட்டு வாங்கிக்கோ.” என்று கணவன்அன்பாய்மனைவியிடம் கட்டளை போடுவான்.

மனைவிஏனாம்!  நேத்தைக்கு ௯ட ரெண்டு போட்டுக்கோங்கன்னு அம்மா ஆசையா போட வந்தப்போ, எனக்கு ஏற்கனவே பல் வலிஅத்தைன்னு, சொல்லி அம்மாவை வருத்தப்பட வச்சேளே.! இப்ப ௯ட வேறே கேட்டு வாங்கனுமாக்கும்.? என்று அழகாய் நொடிக்க,

அட! ஒரு காரணமாய்தாண்டி சொல்றேன்.! கல்யாணத்துக்கு சீரா உங்கப்பா கொடுத்த கட்டிலின் கால் ரெண்டு சரியில்லை.! படுத்தா ஆடிண்டேயிருக்கு இப்போ  உங்கம்மா செஞ்ச  மைசூர் பாகை முட்டு கொடுத்தாவது ஆட்டத்தை நிறுத்தினா  மனுசன் இனியாவது நிம்மதியா தூங்குவேனில்லையா.? என்று மேலும் கணவன் கிண்டலடிப்பான்.

இப்படியான  நகைச் சுவைகளை மனதில் நிறுத்தியபடி, வீட்டுக்கு வந்திருக்கும் என் பெண்ணிற்காக நானும் இந்த மைசூர்பாகை செய்து (இதற்கு முன் நிறைய தடவை செய்து மைசூரூக்கு மிக அருகேயோ, இல்லை, அதையும் தாண்டியோ, ஓடிய அதை விடாமல் பிடித்திழுத்து பெயர் சூட்டு விழா நடத்தியாயிற்று. ) வீட்டிலிருக்கும் அனைவரும் சாப்பிட்டோம். (நல்ல வேளை! விடுமுறைக்கு வந்திருந்த என் மாப்பிள்ளைக்கு பல்வலி ஏதுமில்லை.! மைசூரும் வாயில் போட்டதும், (எங்களுருக்கு கொஞ்சம் அருகில் இருப்பவள்  இவள் என்று இரக்கப்பட்டதால்அதுஎன் பெயரை காப்பாற்றி விட்டதோ என்னவோ?)  நன்றாகவே கரைந்தது. மாப்பிள்ளையும் ஊருக்கு போகும் போதுபார்சல்ஏதும் கேட்கவில்லை!



நீங்களும் இதை எடுத்துக்கொண்டு கரைகிறதா, நன்றாயிருக்கிறதா ?என்று சொல்லுங்களேன். ரொம்பவும் நன்றாகவேயிருக்கிறது என்று சொல்லபவர்களுக்கு (“பல்வலிஎன்று பொய்யாக ஏதேனும் ௯றித் தப்பிக்க மட்டும் செய்யாதீர்கள் ..!) இதுமாதிரி சமையல்களை சுவையாகச் செய்து அவ்வப்போது பரிசாகத் தருகிறேன்.
                                      சாப்பிட்டவர்களுக்கு  நன்றி.!

           மறுபடியும் வேறு ஒரு சமையல் டிப்ஸுடன் வந்து சந்திக்கிறேன்.