Thursday, July 16, 2015

வாழ்த்திசைக்க வாருங்கள் என்றே வரவேற்கிறேன்



எங்கள் வீடெனும் தனித் தடாகத்தில்
ஒரு தங்கத் தாமரை மலர் பூத்தது.
தங்கத்தை நிகர்த்த பெருமழகோடு, இத்
தரணியை வெல்ல மெல்ல உதயமானது.

ஆறுமுகத்தோனின் அருளும் பார்வைகள் என்
அகத்தினில் என்றும் அவனருளால் அசையாதிருக்க,
அண்ணலின் அன்பான பெருங்கருணை மழையினால்,
இன்னல்கள் அதிகமின்றி இனிதாகவே பூத்தது.

முருகா முருகாவென்றே, மனமது ஜபித்திருக்க
முப்பொழுதும், அவன் துணைக்காக தவித்திருக்க
தாமரை மலரில் அழகாக அவதரித்தவன் அந்த
தாமரையையே பரிசாக்கி தந்தருளி விட்டான்.

அழகின் சிரிப்போடு எல்லையற்ற ஆனந்தமும்
அருகருகே இணைய, என் அற்புத நேரங்களும்
அதி சுலபமாய், வாதிடும் சொற்களும் ஏதுமின்றி
அடி பணிந்து பணிவோடு விடைபெற்றுப் போனது.

கண்ணின் மணியாம் என்னவளின் அழகிய
கரு விழியதனில் என் முழுப் பொழுதும்
கட்டுண்டு போனதில் ஒருநாளின் மணிப்பொழுது
கரைந்து தினமும் சில நிமிடங்களே ஆனது..

இக்குயிலின் இனிய வரவால் என் இரவு
துயிலின் உறவும் துண்டித்துப் போனது.
தாமரை மலரின் மனங்கவர் வாசத்தில்
தமிழ்மண சுவாசமும் தடைப்பட்டு போனது.

பூந்தளிரின் வரவால் தமிழினின்று பிரிந்தாலும்,
பூவின் வாசத்தில் மதி மயங்கி கிடந்தாலும்,
மனமெனும் பறவை புதிய உறவின் வரவை
மகிழ்ந்து பறைச்சாற்ற கட்டளையும் பிறப்பித்தது.

தாமரை மலருக்கு தங்களின் அன்பான ஆசிகளை
தப்பாது வந்து மனம் நிறைந்து வாழ்த்திசைத்தால்,
இசைக்கும் இசையினில் மயங்கும் அந்த இளங்குயிலும்   
இனிதான வாழ்வை வளமாக வாழுமெனவும் நம்புகிறேன்.

 மனம் நிறைந்த நன்றிகளுடன் கமலா ஹரிஹரன்.



என் மகளுக்கு அழகான பெண் மகவு பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்த வலைத்தள உறவுகளை அன்போடு அழைக்கிறேன். அதன் காரணமாக இத்துனை நாள் வலைப்பக்கம் வாராது இருந்தமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அனைத்து சகோதர, சகோதரிகளின் பதிவுகளை படித்து வருகிறேன். இனி கிடைக்கும் நேரத்தில், அனைவரின் பதிவுகளுக்கும் கருத்திட முயலுகிறேன். என்னை மறவாதிருக்கும் அன்புள்ள நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.




நட்போடு வாழ்த்திசைக்க வந்தவருக்கும்வருபவர்க்கும் என் பணிவான மிகப் பணிவான நன்றிகள்.