Friday, December 30, 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில்  கால் பதித்து நடக்க ஆரம்பிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும், நாம், இந்த வருடம் அதன் முடிவை சந்திப்பதற்குள், இதையெல்லாம். சாதித்து முடிக்க வேண்டுமெனவும், வருடத்தின் முதல் நாள் தொடங்கி  இறுதி நாள் வரை, தினமும் இச்செயல்களை செவ்வனே செய்ய வேண்டுமெனவும்.நமக்குள் என்றும் வாய்பேசாது மெளனித்திருக்கும், சத்தியத்தை சாட்சி  துணையாக அழைத்துக்கொண்டு உறுதி மொழிகளை எடுத்துக்கொள்கிறோம். ( அதை சாதித்து செயலாக்க முடிகிறதா என்பது வேறு விஷயம்.) சிலருக்கு அந்த வாய்ப்புகள் அமையப் பெற்று, மகிழ்ச்சியையும், நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தையும்  தரலாம். ஆனால், பெரும்பான்மையாக பலருக்கு ஒரிரு மாதங்கள் உறுதிமொழியின்படி நடந்து விட்டு அதன்பின் வருட இறுதியில், தவற விட்ட நாட்களை நினைத்து வருந்தி மறுபடியும் வரும்  வருடத்திற்காக தவம் இருப்பதே வாடிக்கையாக போய் விடுகிறது.

போகட்டும்! .நடந்து வரும் கடந்து போய் கொண்டிருக்கும் 2016 ல் எத்தனையோ வளர்ச்சிகளையும், உன்னதங்களையும் சந்தித்திருந்தாலும்,  சில இழப்புக்களும், இன்னல்களும்  தலைகாட்டி நம்மை  வருத்தியிருக்கின்றன. இனி உதயமாகும்   2017 ம் ஆண்டு எல்லா வளங்களையும்  வாரி வழங்கி அனைத்து மக்கள்தம்  கனவுகளுக்கும், ஆசைகளுக்கும், சாதிக்கும் எண்ணங்களுக்கும் உறுதுணையாக நின்றபடி சிறப்புடன் அமைய, இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். உலக அமைதியும், சகோதர ஒற்றுமையும்  எங்கும் தழைத்தோங்க இறைவனை வேண்டுவோம்.



வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும்  என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.











Thursday, December 1, 2016

ஏனோ இச்செயல் இறைவா...?

ஏனோ இச்செயல் இறைவா…?


காலமும் நேரமும் ஒன்றாக கனிந்தால் தான்
காரியமென்றும் கூடி சேர்ந்து வரும் என்பதை
கணிசமாய் மனமது களிப்பின்றி உணர்த்தினாலும் 
கனிய வைத்திட மனம் தினம் போராடுவதும் ஏனோ.?

சொல்லும் செயலும் செல்லும் வழியெங்கிலும்
வெல்லும்வீழும்!  அது அவன்” துணையுடன் மட்டுந்தான்
என்றெல்லாம் நன்கறிந்தும், “நான்னென்ற அகந்தை
என்றும் முள் பூவாய் மனதில் தினம் பூப்பதும் ஏனோ.?

நீர் குமிழியான நிலையற்ற வாழ்விதுவே என,
நிதமும் மனமே உணர்ந்தாலும், “நானில்லையேல்
எவரும்” இல்லையென்ற மமதை மனதினோரங்களில்
எக்களிப்பாய் தினம் தங்கி குடியேறுவதும் ஏனோ..?

போகும் போது பயனற்ற ஊசியின் முனையும்
போகும் வழிக்கு துணையாகவே உடன் வாராது என,
பட்டிணத்தார் உணர்த்திப் பகன்றதை பலகாலம் கேட்டும்  படித்தும் பகட்டை மனமும் தினம் விரும்பி ரசிப்பதும் ஏனோ.?

நாம் படைத்து விட்ட இந்த மாந்தர்களின் மனப்பக்குவம்
நல்ல பயனுள்ளதாகியதா என்றறியும் ஆவலினால் நீயும்”,
வாழ்வையே தினந்தினம் தேர்வுக் களமாக்கியும்நாங்கள்
வாழ்வியில் தேர்வில் எந்நாளும் தேறாததும் ஏனோ..?

இத்தனையும் தந்து விட்டு நீ மெளனத்தின் நிழலோடு
இருண்ட வாசம் செய்து மெளனமாகி போனதும் ஏனோ.?
விடை அறிய உன் முன்னை வினாக்களை தொடுத்து
விரைவோடு சமர்ப்பித்தும்விடை பகர நீயும் தாமதிப்பதும் ஏனோ.?

அத்தனையும்  புரிய வைத்து,  அன்பாய்  பயிற்றுவிக்க
பரந்தாமனாக   நீயும்,  பார்த்திபன்  நிலையில் நானும்
மீண்டுமொரு முறை கீதை பெற,  நிலைகொள்ளா இம்
மனம் தவிப்பதை  எப்படி .உனக்கு உணர்த்துவேன் இறைவா!